"வாருங்கள் வாக்களிப்போம்" ; அழைப்பிதழ் தந்து நூதன முயற்சி செய்யும் ஸ்ரீரங்கம் தேர்தல் அலுவலர்.

Saturday 06, March 2021, 16:13:41

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தயக்கமின்றி வந்து வாக்களிப்பதை அதிகரிப்பதற்கு திருமண அழைப்பிதழ் போல் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகம் செய்து ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த விபரம் வருமாறு;

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யவேண்டும் என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்தஉத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் தங்களது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் வாக்களிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மகேந்திரன் ஆகியோர் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை வினியோகம் செய்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

invi
அந்த துண்டு பிரசுரங்களில் ‘வாக்களிக்க அழைப்பிதழ்’ என தலைப்பிட்டு மணமக்கள் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்’ என்ற வாசகங்களுடன் 6-4-2021 காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை செலுத்தும் படி அழைக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது.

இந்த அழைப்பிதழில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். இதுபற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடவும் தவறவில்லை.

இந்த நூதன பிரசாரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz