தொலைந்து போன சேலம் தி.மு.க. அலுவலகத்தினைத் தேடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள்!

Tuesday 06, November 2018, 20:19:20

சென்னை அண்ணா அறிவாலயம் போன்று சேலம் மாவட்ட தி.மு.க.வுக்குச் சொந்தமாக அலுவலகம் ஒன்றினை சேலத்தின் மையப்பகுதியில் நிறுவ வேண்டும் என்று  சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளராக நாற்பதாண்டுகளுக்கு மேல் இருந்தவரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் ஆசைப்பட்டதன் விளைவாக எழுந்ததுதான் சேலம் மாவட்டத் தி.மு.க. அலுவலகமான ‘கலைஞர் மாளிகை’.

பொதுமக்களிடமும் தி.மு.க.வினரிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டு திரட்டப்பட்ட நிதியினைக் கொண்டு 4260 சதுரடி நிலப்பரப்பில் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே கம்பீரமாகக் கட்டப்பட்டதுதான் கலைஞர் மாளிகை. தரையடித் தளம், தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம்  என்று நான்கு தளங்களை இந்தக் கட்டடம் கொண்டிருந்தாலும் தரையடித் தளம், தரைத்தளம் தவிர்த்த மற்ற இரு தளங்கள் மட்டுமே கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டது.

இது போக கலைஞர் மாளிகையின் மீதமுள்ள இரண்டு தளங்களையும் கட்சியின் வருவாய்க்காக வாடகைக்கு விடுவது என்று கட்சியில் முடிவெடுக்கப்பட்டபோது, தரையடித் தளம் (அண்டர்கிரவுண்ட்) உணவு விடுதி ஒன்றுக்கு வாடகைக்கு விடப்பட்டது. தரைத்தளம் வீரபாண்டி ஆறுமுகத்துக்குச் சொந்தமான வீரபாண்டி பெனிபிட் பண்ட்ஸ் என்ற நிதிநிறுவனத்தை வாடகைக்கு  விடப்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு அந்த நிதி நிறுவனம் அங்கிருந்து காலி செய்யப்பட்டது. பிறகு வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனுடைய மருமகனுக்குச் சொந்தமான சுரக் ஷா  மருத்துவமனைக்கு  வாடகைக்கு விடப்பட்டது.

தரைத்தளம் வணிக நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்ட காரணத்தினால் கட்சி அலுவலக நுழைவு வாயில் மெயின்ரோட்டில் உள்ள தரைத்தளத்தில் அமைக்க முடியாமற் போய்விட்டது.  முகப்பு வாயிலுக்குப் பதிலாக தரைத்தளத்தை ஒட்டினாற்போல சுமார் ஐந்தடி அகலமுள்ள குறுகலான சந்துதான் கட்சி அலுவலகத்துக்குச் செல்லும் வழியாக விடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்துக்கு உள்ளே சென்று வர இந்த ஒரே வழி மட்டுமே உள்ளது. எதாவது ஆபத்து, அவசரம் என்றால் உள்ளே இருப்பவர்கள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட முடியாது என்கின்றனர் இது பற்றி அறிந்தவர்கள்.

எனவே, தரைத்தளத்தை யாருக்கும் வாடகைக்கு விடக் கூடாது; மெயின்ரோட்டில் உள்ள தரைத்தளமும் கட்சி அலுவலமாகவேப் பயன்படுத்தப்பட வேண்டும். அங்கு கட்சி அலுவலகத்துக்குப்  பிரதான வாயில் சிறப்பானதாக அமைக்கப்பட வேண்டும். கட்சி அலுவலகக் கட்டடத்தின் தரைத்தளத்தையும், தரையடித் தளத்தையும் வாடகைக்கு விட்டுத்தான் கட்சிக்கு வருவாய்த் தேட வேண்டிய அவசியம் எப்போதும் இருந்ததில்லை என்று கட்சியினுள்ளேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.  

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்டத் தி.மு.க.வில்  பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்ட தி.மு.க. மூன்றாகப் பிரிக்கப்பட்டு சேலம் மத்திய மாவட்டத்துக்குப் பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன் செயலாளராகவும், மேற்கு மாவட்டத்துக்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டனர். சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவை செயலாளராக அறிவிக்காமல், பொறுப்பாளராக மட்டுமே இதுநாள் வரையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வைத்துள்ளார்.

தற்போது கலைஞர் மாளிகை மத்திய மாவட்ட தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் செயலாளராக உள்ள பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன் வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர எதிர்ப்பாளர்; தற்போதைய தலைவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். இவர் பொறுப்புக்கு வந்தவுடன் சுரக் ஷா  மருத்துவமனை தரைத்தளத்தில் இருந்து காலி செய்து விட்டது. ஏற்கனவே தரையடித்தளமும் நீண்ட நாட்களாக காலியாகவே இருந்து வந்தது. இனியாவது தங்கள் எண்ணப்படி அந்த இரண்டு தளங்களுமே கட்சி அலுவலமாக மாற்றிப் பயன்படுத்தப்படும் என்று காத்திருந்த தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பில் மண்தான் விழுந்தது.

கட்சி அலுவலகத்தின் தரையடித்தளம், தரைத்தளம் இரண்டுமே ‘சுப்ரீம் மொபைல்ஸ்’ என்ற செல்போன் கடைக்கு வாடகைக்கு கட்சித் தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக வாடகைக்கு விடப்பட்டது. இதற்கு மாத வாடகை ரூ 1 இலட்சத்து 85 ஆயிரம் எனவும், அட்வான்ஸ் ரூபாய் 15 இலட்சம் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையினை வாடகையாகக் கொடுக்கும் உரிமையால் ஒட்டு மொத்த கட்டடமும் தங்களுக்கானது என்ற எண்ணத்தோடு கலைஞர் மாளிகையினை தன்னுடைய பிரமாண்டமான பெயர்ப்பலகையினால் மூடி மறைத்து விட்டது இந்த நிறுவனம். கட்சி அலுவலகம் முழுவதையுமே தனது சொந்தக் கட்டடமாக நினைத்துக் கொண்டு அது ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது எனக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுப் பேருந்து நிலையம் எதிரே எங்கிருந்து பார்த்தாலும் மாவட்ட தி.மு.க. அலுவலகம் மிகத் தெளிவாகத் தெரியும்படி அதன் புறத் தோற்றம் இருந்தது. கலைஞர் மாளிகை, மாவட்ட தி.மு.க. அலுவலகம், வீரபாண்டியார் அரங்கம் ஆகிய எழுத்துக்கள் தொலைதூரத்திலும் தெளிவாகத் தெரியும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது செல்போன் நிறுவனம் செய்துள்ள ஆக்கிரமிப்பில் அவை யாவும் போன இடம் தெரியவில்லை. கட்சி இடத்தில் வாடகைக்கு வந்தவர்கள் முழுக் கட்டடத்தையும் ஆக்கிரமித்திருப்பது எந்த வகையில் நியாயம்? என்று அங்கலாய்க்கின்றனர் சேலம் தி.மு.க.வினர்.

நல்லவேளையாக தரைத்தளத்தில் உள்ள வீரபாண்டியார் சிலையினை மட்டும் பெரிய மனது செய்து அவர்கள் மூடவில்லை என்பது மட்டுமே தி.மு.க. தொண்டர்களின் ஒரே ஆறுதலாக உள்ளது. கலைஞர் மாளிகையினை மூடி மறைக்கும் விதத்தில் தன்னுடைய விளம்பரத்தினை அமைத்துக் கொண்ட இந்த செல்போன் கடையினைத் திறந்து வைத்தது வீரபாண்டி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தையே காணோம் என்று சொல்கிற அளவுக்கு நடந்துள்ள இந்த ஆக்கிரமிப்பினைக கண்டு தொண்டர்கள்தான் கொதித்துப் பொய் உள்ளனரே தவிர நிர்வாகிகள் யாரும் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் வியப்பான விஷயம். கட்சி அலுவலகத்துக்குப் பொறுப்பானவராக உள்ள சேலம் மத்திய மாவட்டதி.மு.க.  செயலாளரும் சரி; மற்றுமுள்ள இரு மாவட்டங்களச் சேர்ந்த செயலாளர், பொறுப்பாளர் ஆகிய இருவரும் சரி  இதைப் பற்றி கண்டும் காணாமலுமே உள்ளனர் என்று  தொண்டர்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.

கட்சித் தலைமைக்கு இதுகுறித்துப் புகாரினை அனுப்பியுள்ள அவர்கள் கட்சி மேலிடம் தலையிட்டு இந்த விவகாரத்தில் தக்க  நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையுடன் அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர். “எல்லாம் காலக்கொடுமை சார்! தலைவர் வீரபாண்டியார் மட்டும் இருந்திருந்தார்னா இப்படிப்பட்ட அசிங்கம் நடக்க ஒருபோதும் அனுமதிருக்கவே மாட்டார்” என்று ஆற்றாமையுடன் அவர்களது குரல்கள் ஒலிக்கின்றன.

கொசுறு: என்னதான் இலட்சங்களில் வாடகையினை வாங்கி வருவாயினைப் பெருக்கிக் கொண்டாலும் சேலம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தால் அதன் தொலைபேசிக்கான பில்லைக் கூடக் கட்டமுடியாத நிலையே உள்ளது. தொலைபேசிக்கான பில் கட்டப்படாததால் சேலம் தி.மு.க. அலுவலகத்தின்  தொலைபேசியின் (0427-2448340) இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த வீரபாண்டியாரின் பெயரில் அந்தத் தொலைபேசி இணைப்பு இருப்பதால் அந்தத் தொலைபேசிக்கு நான் பணம் கட்ட மாட்டேன் என்று மத்திய மாவட்டச் செயலாளர் கூறிவிட்டதால் இந்த நிலை என்று கூறப்படுகிறது. கட்சி அலுவலகத்தின் அதிகாரபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டதால் தொண்டர்களால் கட்சி அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz