பழ.நெடுமாறன் குறித்த வழக்கில், நீதிக்குத் தண்டனை - வைகோ அறிக்கை

Friday 16, November 2018, 10:20:49

பழ.நெடுமாறன் குறித்த வழக்கில், நீதிக்குத் தண்டனை கிடைத்துள்ளதாக அறிக்கை ஒன்றினை வைகோ வெளியிட்டுள்ளார்.

வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1994 ஆம் ஆண்டு, ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற நூலை, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எழுதி, அவரது துணைவியார் வெளியீட்டாளராக நூல் அச்சிடப்பட்டது.

அந்த நூல் தமிழ்நாட்டில் வெளியிடப்படவில்லை.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்த நூல்களை விமானத்தின் மூலமாக ஜெர்மனிக்கு அனுப்ப இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திரு பழ.நெடுமாறன் அவர்கள் மீதும், அவரது துணைவியார் மீதும், புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்த திரு சாகுல் அமீது மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு 124 (ஏ) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 10 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 34, பிரிவு 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், 2006 அக்டோபர் 18 ஆம் நாள், தி.மு.க. ஆட்சியில், தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். எனவே, தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், புத்தகங்களைத் திருப்பித் தரவில்லை. அவற்றைத் திரும்பப் பெற வேண்டி, திரு. நெடுமாறன் அவர்கள், குடிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு, 2007 மார்ச் 2 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 11 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. விசாரணையைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தனர்.

இந்தப் பின்னணியில், உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு முரளிதரன் அவர்கள், 2018 நவம்பர் 14 ஆம் நாள் அன்று, மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்ததோடு மட்டும் அல்லாமல், தீர்ப்பில் கூறி இருக்கின்ற வாசகங்கள் மிகவும் கடுமையானவை; கருத்து உரிமையின் அடித்தளத்தையே தகர்ப்பவை.

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் 19 ஆவது பிரிவின் கீழ், கருத்து உரிமை, பேச்சு உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது. உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பின்படி, தமிழ் ஈழம் சிவக்கிறது என்ற இந்த நூலில், தமிழ் ஈழம் என்ற கொள்கை வலியுறுத்தப்படுவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இருப்பதால், இந்த நூலின் கருத்துகள், அந்த இயக்கத்திற்கு ஆதரவான மனப்பான்மையை மக்கள் மனங்களில் ஏற்படுத்தும் என்றும், அது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும், ஆகவே, நெடுமாறன் அவர்கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு மட்டும் அல்லாமல், காவல்துறையினர் பொறுப்பில் உள்ள புத்தகங்களை உடனே அழிக்க வேண்டும் என்றும், நீதித்துறை வரலாற்றில் இல்லாத ஒரு அதிர்ச்சி தரத்தக்கத் தீர்ப்பைத் தந்துள்ளார்.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொடாவில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறையில் 19 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தேன்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் அல்ல என்ற கருத்தைப் பதிவு செய்து நீதி வழங்குமாறு, சிறையில் இருந்தவாறு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். நீதியரசர் ராஜேந்திர பாபு, நீதியரசர் மாத்தூர் ஆகியோர், என்னுடைய ரிட் மனுவை ஏற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது, பொடா சட்டப் பிரிவுகளின் கீழ் வராது என்று, கருத்து உரிமைக்குக் காப்பு உரிமை தந்து, தீர்ப்பு அளித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை உதறி எறிந்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளாரா?

தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதால், இந்திய இறையாண்மைக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

விடுதலைப்புலிகள் மீதான தடையே செல்லாது என்று நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் போராடி வருகிறேன்.

திரு நெடுமாறன் அவர்கள் எழுதிய நூலில், இந்திய இலங்கை ஒப்பந்தம், ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்பதையும், துளிநீரும் பருகாமல் 12 நாள்கள் அறப்போர் நடத்திய திலீபன் 1987 செப்டெம்பர் 26 இல் உயிர்நீத்த தியாகத்தில் இருந்து, 1992 ஆம் ஆண்டு ஜனவரியில், பன்னாட்டுக் கடல் பரப்பில், விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு, இந்தியக் கடற்படையினரால் சாகடிக்கப்பட்டது வரையிலான துயர நிகழ்வுகளையும், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் பட்டியல் இட்டுள்ளார்.

இதில் தவறு ஏதும் இல்லை.

அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம், ஆயுதம் ஏந்தாத தமிழர்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தது; தமிழ் மக்களுக்கு எதிராகப் பல கொடுமைகள் செய்தது எல்லாம், அந்தக் காலகட்டத்தில் ஆதாரங்களோடு வெளிவந்தன. அதனால்தான், 1990 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள், இலங்கையில் இருந்து திரும்பி வந்த இந்திய இராணுவத்தை வரவேற்கச் செல்ல மாட்டேன்; என் சகோதரத் தமிழர்களைப் படுகொலை செய்த இந்திய இராணுவத்தை எப்படி வரவேற்பேன்? என்று கேட்டார்.

இலங்கையில் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவர்கள், ஓய்வு பெற்றதற்குப் பின்னர்,  இலங்கையில் இந்திய அமைதிப்படை அனுபவங்கள்; இலங்கையில் தலையீடு என்ற தலைப்பில் எழுதிய நூலில், விடுதலைப்புலிகளைப் பாராட்டி உள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்திய அரசு சுட்டுக்கொல்லும்படிச் சொன்னதாகவும், அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நூல் தடை செய்யப்படவில்லை. தளபதி ஹர்கிரத் சிங் இன்றைக்கும் உயிரோடு இருக்கின்றார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் தாமஸ், நீதியரசர் வாத்வா, நீதியரசர் தாத்ரி மூவரும், இந்திய அமைதிப்படை, இலங்கையில் தமிழர்களுக்கு அராஜகம் புரிந்தது என்றே தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

உண்மை இவ்வாறு இருக்கின்ற நிலையில், தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசவோ, எழுதவோ கூடாது என ஒரு தீர்ப்பு வருகிறது என்றால், அது தமிழ்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பா? அல்லது ராஜபக்சே ஆட்சிக்காலத்துச் சிங்கள நீதிமன்றத்தின் தீர்ப்பா? என்ற கேள்வி, தமிழர்களின் மனங்களில் விஸ்வரூபமாக எழுகின்றது.

புத்தகங்களைத் திருப்பித் தருவதா? கூடாதா? என்ற நிலை எடுக்க வேண்டிய வழக்கில், புத்தகங்களை அடியோடு அழிக்கச் சொன்னது, இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒன்று. அப்படியானால், தளபதி ஹர்கிரத் சிங் எழுதிய புத்தகத்தை, இந்திய அரசு அழிக்கச் சொல்லுமா?

இலங்கையில் உள்ள தமிழ் ஈழ மக்களுக்கு சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று, 1976 மே 14 இல், தமிழர் தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்யப்பட்டது.

சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கருத்து, கோடிக்கணக்கான தமிழர்களின் மனங்களில் வரையப்பட்டு விட்டது. அதனை எந்தத் தீர்ப்பும் அழித்துவிட முடியாது.

ஈழத்தமிழர்களின் உரிமைக்காக, முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் உயிரை, பற்றி எரிந்த நெருப்புக்குத் தாரை வார்த்தனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டனர். இந்தத் தீர்ப்புகளால், தமிழ் ஈழ விடுதலை உணர்ச்சியைத் தமிழகத்தில் பரப்புவதைத் தடுத்துவிட முடியாது.

எனினும், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வார்கள் என்று கருதுகின்றேன். நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz