நிவாரணப் பணிகள் குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Tuesday 20, November 2018, 18:10:26

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொய்வின்றி நிவாரணப்பணிகள் தொடரும்; மீட்பு நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து வதந்திகளை பரப்புவர்களை மக்கள் நம்ப வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை எழிலகத்தில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

கஜாபுயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் வலைகள், படகுகள், விவசாயிகளின் பயிர்கள் என பல இழப்புகள் ஏற்பட்டுள்ளதன.  புயல் பாதிப்புப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்பைடையில்  நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே சமயம், அரசின் மீட்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் வீட்டில் உட்கார்ந்து கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடாமல், அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளை பற்றித் தெரியாமல் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப அரசு செயல்பட்டு வருகிறது.

புயல் பாதிப்பால் உயிரிழப்புகளை தடுக்க, மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் அரசு கொண்டு வந்தது. பேரிடர் நேரத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்; மீட்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுவது அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். உணவு, உறக்கமின்றி நிவாரண பணிகளில் இரவு,பகலாக ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தியாகத்தை இதுபோன்ற செயல்களால் கொச்சைப்படுத்த வேண்டாம். எனவே, மீட்பு நடவடிக்கை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். 

இந்த நேரத்தில் மக்களை காக்க வேண்டிய அரசின் கடமை, ஆகவே இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், அரசு மீது காழ்ப்புணர்ச்சி, பழி சுமத்தாமல் அனைவரும் அரசுடன் கரம் கோர்த்து மீட்புப் பணிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். குக்கிராமங்களிலும் கூட மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; 100% முழுமையாக அதனை நிறைவேற்ற, அரசுக்குப் போதிய அவகாசம் தேவை. விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தைச் சீரமைப்பதே அரசின் முதல் பணி ஆகும். குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கியும், ஜெனரேட்டர் மூலம் வீடுகளின் மேல்தேக்க நீர்த் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது.

மீட்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அதிகாரிகளைப் பொதுமக்கள் சிறைபிடிப்பது தவறான செயலாகும். சிலரது தூண்டுதலின் பேரில் இது போன்ற செயல்களில் அப்பாவி மக்கள் ஈடுபடுகிறார்கள். நிவாரணமும், அரசின் பார்வையும் உங்கள் மீது திரும்ப வேண்டும் என்றால் சாலைமறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுங்கள் என சிலர் கூறும் அறிவுரைகளை மக்கள் ஏற்க வேண்டாம். இது பொதுமக்களுக்குப் பயன் அளிக்காது; மாறாகத் தீமையே ஏற்படுத்தும். ஆகவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களைப் பொதுமக்கள் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குழந்தைத் தனமாகக் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் எங்கிருந்தாலும் நடைபெறும் மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

பேரிடர் காலங்களில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அரசியல் கட்சிகளோ, மக்களோ யாரும் கேட்காதபோது 4 லட்சம் ரூபாயிலிருந்து ரூ10 லட்ச ரூபாயாக உயர்த்தி முதல்வர் வழங்கி உள்ளார். அதே போன்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், 11 அமைச்சர்களைக் கூடுதலாக நியமித்து, நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் ஊழியர்களையும் பிற மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று முதல் அடுத்த 2 தினங்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் எச்சரித்திருந்தாலும், தொடர்ந்து தாழ்வுநிலையை பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் யாரும் அச்சமே, பயமே அடைய தேவையில்லை, நிவாரண மற்றும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடைபெறும்.

புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வெளிநாடுகளில் ஏன் வெளிமாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பார்த்து இருப்போம். கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது தெரியும். பேரிடர் மேலாண்மைத்துறையினை மறைந்த முதல்வர் அம்மாதான் ஏற்படுத்தி, அதற்கான நிதியை ஒதுக்கினார். அந்த வகையில் ஊராட்சி தோறும் டிரக், ரம்பம் உள்பட நவீன உபகரணங்கள் வாங்கி வைத்து, பேரிடர் காலங்களில் பயன்படுத்தி வருகின்றோம்.

கஜா புயலால் பாதிப்பு ஏற்படும் தகவல் கிடைத்தவுடன், மக்கள் அழைத்து வந்து நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கஜா புயலில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பேரழிவை ஏற்படுத்தினாலும், மக்களை எதுவும் செய்ய முடியாத அளவிற்கு அம்மாவின் அரசு காப்பாற்றியுள்ளது.

இதனைக் கண்டு வியந்த எதிர்கட்சிகள் எல்லாம் அம்மாவின் அரசை வெகுவாகப் பாராட்டின. அத்தியவாசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டே, துணை முதல்வர் நேற்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து 10 கிலோ அரிசி, பால் பவுடர், பிஸ்கட், ரூ.1000 பணம் ஆகியவற்றை வழங்கினார். அதே போன்று மக்களுக்கு பால் கிடைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மீட்புப் பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிந்து மக்களின் நம்பிக்கையை முழுமையாக பெறுவோம் என்று செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz