கையில் மதுபாட்டிலுடன் விஷால் பட விளம்பரம்: மருத்துவர் இராமதாஸ் கண்டனம்

Wednesday 21, November 2018, 19:52:53

லைட் ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனமும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும் இணைந்து நடிகர் விஷாலின் அடுத்த படமான ‘அயோக்யா’வைத் தயாரித்து வருகின்றன. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராகப் பணிபுரிந்த வெங்கட்மோகன் இந்தப் படத்தை இயக்கும் இந்தப் படத்துக்காக கையில் பீர்பாட்டிலுடன் காவல்துறை வாகனம் மீது நடிகர் விஷால் சாய்ந்து நிற்பது போன்று வெளியாகியுள்ள  விளம்பரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இந்த விளம்பரத்துக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் அந்த விளம்பரம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இராமதாஸ் இரண்டு டிவிட்டுகளைப் பதிவிட்டுள்ளார். 

இராமதாஸ் தனது முதலாவது பதிவில் ‘பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வருவதென்ன? நடிகர் சங்கப் பொதுச் செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது அடுத்த பதிவில், ‘‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் கையில் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் என்கிற வகையில் விஷாலுக்குக் கடிதம் எழுதி இருந்தேன். இப்போது புகையைத் தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார் என்ன ஒரு சமூகப் பொறுப்பு!’ என்று இராமதாஸ் நடிகர் விஷாலை இடித்துரைக்கிறார்.

மருத்துவரின் எண்ணத்தை ஏற்று அயோக்யா’ பட விளம்பரத்தை விஷால் மாற்றுவாரா? அல்லது இந்தக் கண்டனங்களை தனது படத்தை ஓட வைக்கும் நெகடிவ் பப்ளிசிடியாக நினைத்துக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz