தர்மபுரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் முன்பு ஆடைகளைக் களைந்து ஆனந்த நடனமாடிய மர்ம நபர்

Wednesday 28, November 2018, 10:30:23

தர்மபுரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க கட்சியின் தலைமை அலுவலகம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள குறுக்கு சாலையில் அமைந்துள்ளது. நேற்று இந்த அலுவலக வாசலில் திடீரென ஒருவர் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு ஆனந்த நடனமாடி பின் அங்கிருந்து தனது பைக்கில் ஏறிச் சென்று விட்டார். 

அ.இ.அ.தி.மு.க கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி தர்மபுரி நகரின் மிகவும் பிசியான பகுதி. எப்போதும் வாகனங்கள் அதிகம் சென்று வரக் கூடிய இந்தப் பகுதி தர்மபுரியின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியும் கூட.

மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்துள்ள இந்தப் பகுதியில் நேற்று மாலையில் பைக் ஒன்றில் வந்த ஆசாமி ஒருவர் அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு முன்பாக தனது வண்டியினை நிறுத்தி விட்டு தனது ஆடைகளைக் களைந்து எறிந்தார்.

தனது உடலில் பனியனை மட்டும் விட்டு விட்டு மற்ற ஆடைகளைக் களைந்து நிர்வாணமான அவர் ஏதோ உரத்த குரலில் சொல்லியபடி, கைகளையும் கால்களையும் உடற்பயிற்சி செய்பவரைப் போல நீட்டி வீசி அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்தைப் பார்த்தபடி நடனமாடத் தொடங்கினார்.

சரியாகப் பதினோரு வினாடிகள் நீடித்தது அந்த ஆசாமியின் நிர்வாண நடனம். அருகிலுள்ளவர்கள் என்னவோ வித்தியாசமாக நடக்கிறது என்பதைக் கவனித்து அந்த இடத்துக்கு வருவதற்குள் அந்த ஆசாமி தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டார்.

சாலையில் கழற்றி கீழே வீசியிருந்த தனது உடைகளை எடுத்து அவசரகதியில் அணித்து கொண்ட அந்த ஆசாமி, நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கில் ஏறி அமர்ந்து அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்று விட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாண நடனமாடிய அந்த நபர் யார்? அவர் ஏன் அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்தின் முன்பாக தனது பைக்கினை நிறுத்தி, கட்சி அலுவலகத்தினைப் பார்த்தபடி சத்தமிட்டு நிர்வாண கோலத்தில் இப்படி ஒரு நடனத்தை அரங்கேற்ற வேண்டும்?

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? மாற்றுக் கட்சியினைச் சேர்ந்த அதிமுக எதிர்ப்பாளரா? அல்லது உள்கட்சிப் பூசலால் பழிவாங்கப்பட்ட அதிமுக பிரமுகரா? என்பது போன்ற எந்த கேள்விகளுக்கும் விடையைக் கண்டறிய முடியாமல் திணறிக் கொண்டுள்ளனர் தர்மபுரி நகரப் போலீசார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz