ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கத் தடை நீட்டிப்பு!

Monday 06, August 2018, 09:51:18

கர்நாடக மாநிலத்தில் காவிரிபடுகைகளில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. அதனால், அங்குள்ள அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்ட காரணத்தால் தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரித்தது.

கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு அதிகபட்சமாக 1.20 லட்சம் கனஅடிவரை நீர்வரத்து உயர்ந்ததால் ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக, 30 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் அருவியில்  குளிக்கவும், பரிசலில்  பயணம் செய்யவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடையை நீடித்து வந்தது.

இந் நிலையில் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா வந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்ய முன்பு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க ஆகஸ்ட் முதல் தேதியன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர் உள்ளிட்ட மாவட்ட வருவாய் அதிகாரிகள் பாதுகாப்பு உடையணிந்து ஆற்றில் பரிசலில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த வருவாய் அதிகாரிகளிடம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறித்து பல்வேறு தகவல்கள் ஆய்வு செய்தார். வினாடிக்கு 18000 கனஅடி வரை நீர்வரத்து இருந்த காரணத்தால் ஏற்கனவே இருந்த தடையை மேலும் நீட்டித்து ஆட்ச்சியர் மலர்விழி உத்தரவிட்டார்.

அதன் பின்னர் நீர்வரத்து வேகம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து  ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ஹரிசல் சவாரிக்கு மட்டும் அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல்லில் ஒரு மாத தடைக்குப் பிறகு மீண்டும் உற்சாகத்துடன் பரிசல் சவாரி தொடங்கியது.

ஆர்பரித்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாதுகாப்பு வேலி இன்னமும்  சீரமைக்கப்படாததால் ஆற்றுக்குள் சுற்றுலாப் பயணிகள் இறங்கி குளிக்க விதிக்கப்பட்ட  தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz