டெல்லியை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்!

Saturday 01, December 2018, 18:41:04

வேளாண் கடன் தள்ளுபடி, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலை நிர்ணயம், சுவாமிநாதன் குழு அறிக்கை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படிக் கோரி இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர் சங்கங்கள் என 207 சங்கங்களைக் கொண்ட கூட்டமைப்பின் சார்பில், நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய டெல்லியில் இருந்து இரண்டுநாள் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், பிகார், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்  நடைபெற்ற பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தி னர். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துக் காணப்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி சென்றனர். அவர்களும் ராம்லீலா மைதானத்துக்கு சென்றனர். விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு அந்த மைதானத்திலேயே தங்கினார்கள்.

பேரணியில் அய்யாக்கண்ணு, ”தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று ஜந்தர் மந்தரில் நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரள வைத்துள்ளது. விவசாயிகளைத் தடுக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் டெல்லியில் குவிக்கப்பட்டிருகிறார்கள்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை 3 கிமீ நிர்வாணமாகச் செல்ல உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பேரணியின் முக்கிய கோரிக்கை விவசாயிகளின் பிரச்சினையை விவாதிப்பதற்காக உடனடியாக 3 வார நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதாகும். விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் "தேவகௌடா" கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினையை கருத்தில் கொள்ள வேண்டும்.. விவசாயிகளுக்கு தற்போது எல்லாம் தெரியும். எந்த ஒரு அரசும் விவசாயிகள் இல்லாமல் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி விவசாயிகள், ராம்லீலா மைதானத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியை தடுக்க டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ராம்லீலா மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.ஆனால் விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆவேசமாக வெளியேறி போலீஸ் தடுப்பு வேலிகளை தகர்த்து எறிந்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி ரஞ்சித்சிங் மேம்பாலம், பாரகம்பா ரோடு வழியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றது. வழியில் சில ரவுண்டானாக்களில் விவசாயிகளை போலீசார் கட்டுப்படுத்த முயன்றதால் விவசாயிகள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள்.

பேரணியில் சென்ற விவசாயிகள் கைகளில் பதாகைகளை வைத்து இருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.இதில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் மண்டை ஓடு மற்றும் எலும்புகளுடன் சென்றனர். போராட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழக விவசாயிகள் 10 பேர் திடீரென முழு நிர்வாணமாக மாறி சாலையில் படுத்துக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இதே போன்று டெல்லியில் தடையை மீறி பேரணி நடத்திய போது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விவசாயிகளை விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz