ஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Thursday 06, December 2018, 19:32:32

சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ளது இஸ்மாயில்கான் ஏரி. ஒரு காலத்தில் அந்தப் பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வந்த ஏரி பின்னாளில் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்த இடமே தெரியாமல் உருமாறி வீடுகளாகவும், கடைகளாகவும் மாறிப் போனது.

இஸ்மாயில்கான் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டதோடல்லாமல் அதன் நீர்வழித் தடங்களும் மறிக்கப்பட்டு மருத்துவமனை போன்ற பெரிய கட்டடங்கள் எழுப்பப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு கண்டனக் குரல்கள் எழும்பியபோதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலையே இருந்து வந்தது.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் இஸ்மாயில்கான் ஏரியின் நீர்வழித் தடம் மறிக்கப்பட்டு அந்த இடத்தில் குறிஞ்சி என்ற பெயரில் ஒரு மருத்துவமனை  உதயமானது. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் இஸ்மாயில்கான் ஏரியின் நீர்வழிப் புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சேலம் வருவாய்க் கோட்டாட்சியர் மருத்துவமனை ஆக்கிரமைப்பை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நீர்வழி புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் மருத்துவமனை பகுதிகளை வரும் 10 ம் தேதி அகற்ற உள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடடம் அகற்றப்படுவது குறித்து மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு முன்பாக குறிஞ்சி மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க  நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. 

இதேபோல் ஏரியை ஆக்கிரமித்து கட்டியுள்ள  வீடுகள் மற்றும் கடைகளையும் அகற்றவுள்ளதாக அதிகாரிகள் தண்டோரா போட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பு இஸ்மாயில்கான் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது. அதன் தலைவர் பூமொழியிடம் இது குறித்துப் பேசினோம்.

“தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் சேலம் ரெட்டியூர் பகுதியில் இஸ்மாயில்கான் ஏரியின் உள்ளேயே அமர்ந்து அதன் ஆக்கிரமிப்பினை அகற்றக் கோரியது உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் இது குறித்து வழக்கும் தொடுத்தோம். அந்த ஏரியை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள  வீடுகள் மற்றும் கடைகளையும் அகற்றத் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவேக் கருதுகிறோம்.

இஸ்மாயில்கான் ஏரியின் கரைகளைச் சேதப்படுத்தி, ஏரிக்குள் மண்ணைக் கொட்டி அதனை ஆக்கிரமித்தவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து சட்டபூர்வமான தண்டனையை அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்மாயில்கான் ஏரியைத் தூர்வாரி மீண்டும் நீர் நிரம்பிய அழகிய ஏரியாக புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவுகளை ஏரியை ஆக்கிரமித்தவர்களிடமிருந்தே வசூல் செய்ய வேண்டும். அவர்கள் இந்த அபராதத்தினைக் கட்டத் தவறினால் அவர்களது சொத்துக்களை ஜப்தி செய்ய அரசு உத்தரவிட வேண்டும்” என்று நம்மிடம் கூறினார் பூமொழி.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz