2018-ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி - லோக்மட் செய்தி நிறுவனம் தேர்வு!

Sunday 09, December 2018, 11:37:27

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு லோக்மட் செய்தி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் தர்தா இதுபற்றி தெரிவித்துள்ளதாவது:

“லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாநிலங்களவையின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக  கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் டிசம்பர் 13 ஆம் தேதி  மாலை 6 மணிக்கு  டெல்லி,  அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில்  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு  லோக் மட் செய்தி நிறுவனத்தின், ‘நாடாளுமன்ற விருதுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த பத்தாண்டுகளாக  மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலுசேர்த்ததற்காகவும், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்ந்து ஜனநாயகத்துக்கான நேர்மறையான பங்களிப்புகளை முன்னெடுத்துச்  செல்கின்றன. அவருக்கு விருது அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு அமைந்ததற்கு லோக் மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளைப் பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோஜர் ஜோஷியை  தலைவராகக் கொண்ட விருதுகள் தேர்வுக் குழுவில், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, பேராசிரியர் சௌகதா ராய், பிரஃபுல் பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மட் நிறுவனத்தின்  தலைவரான விஜய் தர்தா  ஆகிய மூத்த நாடாளுமன்ற வாதிகள் இடம்பெற்றுள்ளனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz