“தினகரனைத் தூண்டி, தனி இயக்கம் காணவைத்து, அவரை நட்டாற்றில் விட்டவர் செந்தில் பாலாஜி” - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்.

Friday 14, December 2018, 18:14:28

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டார்.

தமிழக அரசு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து விளக்கி பேசிய அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ 50 இலட்சம் மதிப்பிலான 5 ஹைடெக் ஆவின் பார்லர் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் அ.தி.மு.க.வை மூழ்கும் கப்பல் என செந்தில் பாலாஜி வர்ணித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், "செந்தில் பாலாஜி ம.தி.மு..கவில் இருந்து அ.தி.மு.க. வந்து தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார்; ஓடுகாலிகள் ஓடுகாலிகளாகத்தான் இருப்பார்கள்.  செந்தில் பாலாஜிக்கு அடையாளம் தந்தது அ.தி.மு.க." என்றார்.

"செந்தில் பாலாஜி டி.டி.வி தினகரனை நட்டாற்றில் விட்டவர்" என விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "தினகரனைத் தூண்டிவிட்டு தனி இயக்கம் காணவைத்தவர் செந்தில் பாலாஜி" என்றார். மேலும் கூறுகையில் "செந்தில் பாலாஜி நல்ல அரசியல்வாதியல்ல" என்ற அவர், "செந்தில் பாலாஜி தான் டி.டி.வி தினகரனை தவறான வழிக்கு அழைத்து சென்றவர், இவர் அரசியல் வியாபாரி" என்றார்.

டி.டி.வி தினகரனை தவறாக வழி நடத்திய செந்தில் பாலாஜி தற்போது அ.ம.மு.க.வில் இல்லாத நிலையில் டி.டி.வி தினகரனை அ.தி.மு.க. ஏற்றுகொள்ளுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "இதை தலைமை முடிவு செய்யும்" என்றார்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz