கோலாலம்பூரில் நடைபெற்ற 'வல்லினம் கலை இலக்கிய விழா 10' - ஒரு கண்ணோட்டம்

Saturday 15, December 2018, 18:59:03

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட கலை இலக்கிய விழா 2018 ஆம் ஆண்டில் நிறைவு விழாவாக அமையும் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். பத்தாவது கலை இலக்கிய விழாவுக்கான திட்டம் கடந்தாண்டே வரையறுக்கப்பட்டது. அன்றைய நாளிலிருந்து கலை இலக்கிய விழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் 20,000 வெள்ளி செலவை உள்ளடக்கிய கலை இலக்கிய விழா ஆண்டாண்டாக செலவுகள் அதிகரித்து, இவ்வாண்டு அது 40,000 வெள்ளியைத் தொட்டது.

ஏழு நூல்கள், குறுநாவல் பதிப்புத்திட்டம், நான்கு ஆவணப்படங்கள், விழாவுக்கான ஏற்பாடு, தமிழக எழுத்தாளர்களின் வருகை என ஏகப்பட்ட செலவுகள் வல்லினம் இலக்கியக் குழுவை அழுத்தின. செலவுகளை எதிர்கொள்ளும் வண்ணமாக ஏழு நூல்கள் மற்றும் நான்கு ஆவணப்படங்கள் உள்ளடக்கிய விற்பனையட்டையை முன்கூட்டியே வழக்கப்போல் 50 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதைத் தவிர்த்து கடந்தாண்டு வெளியிடப்பட்ட ‘வல்லினம் 100’ இலக்கியக் களஞ்சியத்தைப் பார்த்து அதன் தரத்தையும் அதற்கான உழைப்பையும் பாராட்டி,  தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் வழங்கிய 20,000 வெள்ளி நிதியுதவி கலை இலக்கிய விழா ஏற்பாட்டுக்குப் பேருதவியாக அமைந்தது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விழாவுக்கு நிதியுதவியளிக்கும் தனிநபர்கள் இம்முறையும் கை கொடுத்தனர். அதோடு, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறுகதைப் போட்டியை முன்னிட்டு கலை, இலக்கிய விழாவுக்கு முன்பதாக சிறுகதை பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படியாக ஒவ்வொரு ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்க விழாவுக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.

விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே, எழுத்தாளர்கள் திரு. சு. வேணுகோபால் மற்றும் திரு. பவா செல்லதுரை அவர்கள் கோலாலம்பூர் வந்தடைந்திருந்தனர். விழாவுக்கு முதல் நாள் சிங்கப்பூரிலிருந்து உமாகதிர், விஜிபிரியா மற்றும் சரவாக்கிலிருந்து நோவா போன்றோர் வந்துசேர்ந்தனர். கிராண்ட் பசிபிக் ஹோட்டல் கொஞ்சம் கொஞ்சமாக வல்லினம் கலை இலக்கிய விழாவின் கூடாரமாக மாற தொடங்கியிருந்தது. சிறுகதை பட்டறை நடக்கவிருக்கும் அறை, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்து. தங்கும் அறையில் விழாவில் விநியோகிக்கப்படவிருந்த ஏழு நூல்களும் வல்லினம் சின்னம் அச்சடிக்கப்பட்ட கைப்பையில் நவீன் மாணவர்கள் மூலம் தயாராகிக் கொண்டிருந்தன.

மற்றொரு அறையில் சு.வேணுகோபால், பவா மற்றும் உமாகதிர் இலக்கியம் குறித்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.  ம. நவீன் ஓய்வில்லாமல் அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்தார். முகத்தில் சோர்வு அப்பியிருந்தது. பின்னிரவு ஒரு மணியளவில் தங்கும்விடுதியிலிருந்து வீட்டுக்குக் கிளம்ப, அ. பாண்டியன் பின்னிரவு இரண்டு மணியளவில் குடும்பத்துடன் தங்கும்விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தார். 

காலை எட்டு மணிக்கு சிறுகதை பட்டறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பட்டறைக்காக 53 ஆசிரியர்கள் தங்களைப் பதிவு செய்தனர். அவர்களிடம் 50 வெள்ளி வசூலிக்கப்பட்டது. பட்டறைக்கான இடம், காலை மற்றும் மதிய உணவு, சான்றிதழ் என எல்லாமே அந்த 50 வெள்ளியில் உள்ளடக்கம். சிறுகதை பட்டறைக்காகப் பிரத்யேக புலனக்குழு ஒன்றும் முன்னமே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அக்குழுவில் தொடர்ந்து பட்டறைக்காக வாசிக்க வேண்டிய சிறுகதைகள் பகிரப்பட்டு, விவாதிக்கப்பட்டது. ம. நவீன் விடுதியின் கீழ்தளத்தில் வந்துகொண்டிருந்த ஆசிரியர்களை வரவேற்றபடி நின்றுகொண்டிருந்தார்.

எட்டு மணிக்குத் தொடங்க வேண்டிய பட்டறைக்கு பத்து ஆசிரியர்களே வந்திருந்தனர். சிலர் வந்துகொண்டிருப்பதாகக் கூறினர். இப்படியாக நேரம் தாழ்த்தப்பட்டு எட்டரை மணிக்குப் பட்டறை தொடங்கியது. அறை முழுமையாகியிருந்தது. சு. வேணுகோபால் அவர்கள் காலை உணவை முடித்துகொண்டு தயாராக இருக்க, பட்டறையின் நோக்கமும் அது குறித்த தேவையும் ஆசிரியர்களிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்றைய நவீன இலக்கியத்தில் சு. வேணுகோபால் என்பவர் யார் எனும் அறிமுகத்துடன் அவர் மேடையில் ஏற்றப்பட்டார். ஆசிரியர்கள் மாணவர்களாகினர். சிலர் மிகவும் இறுக்கமாக காணப்பட்டனர். சு.வேணுகோபால் மிக எளிமையாக பட்டறையை வழிநடத்த ஆசிரியர்களின் இறுக்கம் தளர்ந்தது. ஆசிரியர்களுடன் அவர்கள் பட்டறைக்காக வாசித்த கதைகள் தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுத்தார். சில ஆசிரியர்களை அழைத்து கதையும் சொல்லச் சொல்லிக் கேட்டார்.

சிலர் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டாலும் சிலர் சிரித்து மழுப்பினர். சிறுகதை நுணுக்கம் குறித்த சு.வேணுகோபாலின் பேச்சில் முதல் அங்கம் மிக விரைவாக கடந்தது. தொடர்ந்து பவா செல்லதுரை குறித்த அறிமுகம் கொடுக்கப்பட்டது. பவா கதைச்சொல்லியாக மாறினார். வந்தவர்களிடம் வைக்கம் முகம்மது பஷீரின் சிறுகதைகளை சொல்ல அரங்கம் அதில் தன்னையே மறந்துபோயிருந்தது.

பதினைந்து நிமிட ஓய்வுக்குப் பின்பு, பட்டறையின் இரண்டாம் அங்கம் தொடங்கியது. ஆசிரியர்கள் தங்களை முழுமையாகப் பட்டறையில் இணைத்துக்கொண்டனர். உற்சாகமாக கதைகளைக் குறித்து உரையாடினர். தாங்கள் வாசித்து வந்திருந்த சிறுகதைகளைக் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சிறுகதை வடிவம் அதன் நுணுக்கம் குறித்த கேள்விகளை முன்வைத்து அதற்கான விளக்கத்தையும் பெற்றனர்.

‘சொல்ல முடிந்தது’ சிறுகதையைக் குறித்து அதை எழுதியவரான சு.வேணுகோபாலிடம் தீவிரமாக உரையாடினார்கள். சு.வேணுகோபால் வழிநடத்திய பட்டறை நேரத்தை விரைவாக தின்று முடித்தது. கலை, இலக்கிய விழாவுக்கு வழிவிடும் வகையில் பிற்பகல் ஒன்று பதினைந்துக்குப் பட்டறை நிறைவடைந்தது. நாற்பத்தைந்து நிமிட ஓய்வுக்குப் பின் இரண்டு மணிக்கு கலை இலக்கிய விழா தொடங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பதாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலை இலக்கிய விழாவுக்கு வருகை தரும் வழக்கமான நண்பர்களின் முகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தொடங்கின. சரவணதீர்த்தா மலாக்கா மக்கள் புடைசூழ கிராண்ட் பசிபிக் விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தார். கடந்த இரண்டாண்டுகளாக மலாக்கா மாநில அரசு வல்லினம் கலை இலக்கிய விழாவுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துகொடுக்கின்றது. அவ்வகையில் இம்முறையும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. ஜி. சுவாமிநாதன் அச்சேவையை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.

வழக்கமாக குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படும் கலை இலக்கிய விழா, இம்முறை அரை மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. வழக்கத்தைக் காட்டிலும் இம்முறை வருகையாளர்களின் எண்ணிக்கை 300 ஐத்தாண்டிச்செல்ல மண்டபத்துடன் இணைந்திருந்த மற்றோர் அறையும் திறந்துவிடப்பட்டு கூடுதல் நாற்காலிகள் அடுக்கப்பட்டன. அது நிகழ்ச்சியின் தொடக்கத்தை தாமதப்படுத்தியது.

இரண்டரை மணிக்கு வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழா இனிதே தொடங்கியது. முன்னிருக்கையில் மருத்துவர் மா.சண்முகசிவா, தொழிற்சங்கவாதி ஜி.வி.காத்தையா, கூலிம் நவீன இலக்கியக்களம் ஆலோசகர் சுவாமி பிரமானந்த சரஸ்வதி, மூத்த எழுத்தாளர் அ. ரெங்கசாமி, எழுத்தாளர் சீ.முத்துசாமி, எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், பவா செல்லதுரை, அக்கினி, தெள்ளியர் அமைப்பின் தோற்றுனர் திரு.எழிலசரன், செல்லியல் ஆசிரியர் இரா. முத்தரசன், கல்வியாளர் பி.எம்.மூர்த்தி ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக அமர்ந்திருந்தனர்.

விழாவின் தொடக்கமாக, கலை இலக்கிய விழாவின் கொண்டாட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வந்திருந்தவர்களிடம் வல்லினத்தின் கடந்த பத்து வருட கால செயற்பாடுகளும் அது சார்ந்த வரலாறும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதனையடுத்து வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன் தொடக்கவுரையாற்றினார்.

மலேசியாவில் நவீன இலக்கியம் முன்னெடுக்க வல்லினம் எதிர்கொண்ட சிக்கல்களைக் குறித்து விவரித்தார். எவ்வித இயக்கங்களின் ஆதரவுமின்றி, ஊடகங்களின் துணையின்றி, அரசியல்வாதிகளை அண்டிப் பிழைக்காமல் தன் இருப்பை தக்கவைத்து பத்தாண்டுகளில் வல்லினம் மேலெழுந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். முகநூல் கலாச்சாரம் மூலமாக உருவெடுக்கும் போலியான அறிவுவாத கூட்டத்தையும் கடுமையாக சாடினார். மலேசிய இலக்கியச் சூழலில் இலக்கியம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாமல் தொடர்ந்து சால்ஜாப்பு காரணங்களை முன்வைக்கும் கூட்டத்தையும் சாடினார். ம.நவீனின் உரையில் சீற்றம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அது ஞாயமானதும் கூட. 

வல்லினத்தின் ஆவணப்படம் திட்டத்தின் கீழ் மா.செ.மாயதேவன், மா.இராமையா, அக்கினி மற்றும் கோ.முனியாண்டி ஆகிய நால்வர் குறித்து ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அதன் வெளியீடு விழாவின் அடுத்த அங்கமாக தொடர்ந்தது. மா.செ.மாயதேவனும் மா.இராமையாவும் 50களின் எழுத்தாளர்கள். கு.அழகிரிசாமி மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் உருவானவர்கள். அக்கினியும் கோ.முனியாண்டியும் 70களில் புதுக்கவிதை உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளிகள். அதை இயக்கமாக முன்னெடுத்தவர்கள்.

இவர்களை ஆவணப்படம் செய்ததன் வழி இரு வேறு காலத்தின் இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்து ஆவணப்படமாக வெளியிடக்கூடிய தருணம் மகிழ்ச்சியானது. அம்மகிழ்ச்சியை வந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளும் விதமாக ஆவணப்படம் குறித்த குறுங்காட்சி காணொளி ஒளிபரப்பப்பட்டது.

வரலாற்றுடன் தொடர்புடைய தொழிற்சங்கவாதி ஜி.வி.காத்தையா ஆவணப்படத்தை வெளியிட அதனை தெள்ளியர் அமைப்பின் தோற்றுனர் திரு.எழிலரசன் பெற்றுக்கொண்டார். முதுமையின் காரணமாக மா.செ.மாயதேவனும் மா.இராமையாவும் வர முடியாத சுழலில் கோ.முனியாண்டியும் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை. இவர்களின் பிரதிநிதியாக மேடையில் அக்கினி மட்டுமே சபையை நோக்கி வணங்கி நின்றார்.

வல்லினம் கலை இலக்கிய விழாவின் வரலாற்றில் முதன்முறையாக ஏழு நூல்கள் ஒரே மேடையில் வெளியீடு காணும் அங்கம் தொடர்ந்தது. நூல்களை வெளியிட சுவாமி பிரமானந்தா சரஸ்வதி அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு ஒவ்வொரு நூல் குறித்தும் அறிமுகம் கொடுக்கப்பட்டு வெளியீடு கண்டது. அவ்வகையில் முதல் நூலாக ‘மா.சண்முகசிவா சிறுகதைகள்’ வெளியீடு கண்டது. அதனை சுவாமி பிரமானந்தா சரஸ்வதி அவர்கள் வெளியிட எழுத்தாளர் அ.ரெங்கசாமி பெற்றுக்கொண்டார். உடன் நூலின் ஆசிரியர் மருத்துவர் மா.சண்முகசிவாவும் உடனிருந்தார்.

அதனையடுத்து ம.நவீனின் மூன்று நூல்கள் அடுத்தடுத்து வெளியீடு கண்டன. சுவாமி அவர்கள், ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நூலை வெளியிட அதனை எழுத்தாளர் சீ.முத்துசாமி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ‘போயாக்’ சிறுகதை நூலை வெளியிட அதனை செல்லியல் ஆசிரியர் இரா.முத்தரசன் பெற்றுக்கொண்டார். ‘நாரின் மணம்’ நூலை வெளியிட அதனை உமாகதிர் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக, பவா செல்லதுரை திருமதி விஜயலட்சுமி மொழிப்பெயர்த்த ‘கே.எஸ்.மணியம் சிறுகதைகள்’ நூலை வெளியிட அதன் முதல்பிரதியை ஆசிரியர் நோவா பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அ.பாண்டியனின் ‘அவரவர் வெளி’ வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. அதனை வெளியிட எழுத்தாளர் சு.வேணுகோபால் அ.பாண்டியனுடன் மேடை ஏறினார். முதல் நூலை அக்கினி பெற்றுக்கொண்டார். இறுதி வெளியீடாக, இரா.சரவணதீர்த்தாவின் ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் அமைந்தது. அந்நூலை திரு. பி.எம்.மூர்த்தி வெளியிட அதனை எஸ்.பி.பாமா பெற்றுக் கொண்டார்.

வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுநாவல் பதிப்புத்திட்டத்தின் கீழ் தேர்வுபெற்ற மூன்று குறுநாவல்களின் வெளியீட்டு விழா அடுத்த அங்கமாக தொடர்ந்தது. அவ்வகையில் குறுநாவலை வெளியிடுவதற்கு எழுத்தாளர் சீ.முத்துசாமி மேடைக்கு அழைக்கப்பட்டார். நூல் அறிமுகத்துடன் குறுநாவல்கள் வெளியீடு கண்டன.

அவ்வகையில், எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் ‘கருங்காணு’ குறுநாவல் முதல் வெளியீடாக அமைந்தது. நூல் ஆசிரியர் அ.ரெங்கசாமி உடனிருக்க, சீ.முத்துசாமி குறுநாவல் வெளியிட அதனை திருமதி பத்மினி இராஜமாணிக்கம் பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ குறுநாவல் வெளியிடப்பட்டது. அதனை சீ.முத்துசாமி வெளியிட முனைவர் முல்லை இராமையா பெற்றுக்கொண்டார். இறுதியாக, செல்வம் காசிலிங்கத்தின் ‘மிச்சமிருப்பவர்கள்’ குறுநாவலை சீ.முத்துசாமி வெளியிட அதன் முதல்பிரதியை திரு.உத்ராபதி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சிநிரல் நிறைவாக இருந்ததால் வருகையாளர்கள் இளைப்பாற சுடச்சுட தேநீரும் பலகாரங்களும் வைக்கப்பட்டன. ஆனாலும் நிகழ்ச்சி தொடர்ந்த வண்ணமே இருந்தது.

வெளியீட்டு விழா நிறைவுபெற்றவுடன், அடுத்த அங்கமாக ஏழு நூல்களின் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் தொடங்கியது. மருத்துவர் மா.சண்முகசிவா, ம.நவீன், அ.பாண்டியன், இரா.சரவணதீர்த்தா, மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். ஆளுக்கு இரண்டு கேள்விகள் வீதம் என மொத்தம் 10 கேள்விகள் பார்வையாளர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. கேள்விகள் அனைத்தும் அவர்களது நூல் சார்ந்தும் படைப்புகளைச் சார்ந்தும் அமைந்திருந்தன. ஒவ்வொருவரும் நிதானமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தனர்

அதனையடுத்து நூல் விமர்சன உரை தொடர்ந்தது. அதன் முதல் அங்கமாக ‘நாரின் மணம்’ மற்றும் ‘ஊதா நிற தேவதைகள்’ ஆகிய நூல்கள் குறித்து விமர்சன உரையாற்ற உமா கதிர் மேடைக்கு அழைக்கப்பட்டார். முதலில் ‘நாரின் மணம்’ குறித்து பேசத் தொடங்கினார். பத்தி எழுத்துக்கு மிகவும் அவசியமானது அதன் எளிமையான தலைப்பும் எளிமையான நடையும்தான் என ம.நவீனை இரசித்தபடியாக நூலைச் சிலாகித்துப் பேசினார்.

அதனையடுத்து ‘ஊதா நிற தேவதைகள்’ சினிமா விமர்சன நூல் குறித்த விமர்சனத்தை முன்வைத்தார். அதிகமாக உலக சினிமாக்களைப் பார்க்கும் பழக்கமுடைய தனக்கு, இரா.சரவணதீர்த்தாவின் படங்களின் தேர்வு இதுவரை தாம் பார்த்திராத படங்களாக இருப்பது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்ததாக குறிப்பிட்டார்.

அடுத்த விமர்சன உரையாக, எழுத்தாளர் பவா செல்லதுரை ‘போயாக்’, ‘மா.சண்முகசிவா சிறுகதைகள்’, ‘கே.எஸ்.மணியம் சிறுகதைகள்’ ஆகிய சிறுகதை நூல்கள்  குறித்து உரை ஆற்றினார். ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் தன்னை மிகவும் ஆகர்ஷிக்கிற கதைகளைக் குறித்து பேசினார். கே.எஸ்.மணியம் சிறுகதை தொகுப்பிலிருந்து ‘புலிவேட்டை’ மற்றும் ‘கிளிங் கிளிங் பெண்கள்’ சிறுகதைகளை வெகுவாக இரசித்துப் பேசிய பவா, அதன் மொழிப்பெயர்ப்பின் தரத்தை அபூர்வமான ஒன்றாக வர்ணித்தவர் அனைவரையும் கைத்தட்டச் சொல்லி மொழிப்பெயர்ப்பாளர் விஜயலட்சுமிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து, நவீனின் ‘போயாக்’ சிறுகதை தொகுப்பைக் குறித்து பேசிய பவா, நவீனின் போயாக் தொகுப்பைப் பற்றி இதற்கு முந்திய தொகுப்பான மண்டை ஓடியுடன் ஒப்பிட்டு பேசினார். மண்டை ஓடியில் தொடங்கிய நவீனின் சிறுகதை வளர்ச்சி போயாக்கில் வேறொரு தளத்தை அடைந்திருப்பதாக கூறினார். போயாக் தொகுப்பில், வண்டி, போயாக் மற்றும் நாகம் ஆகிய கதைகளைத் தொட்டு அதன் சிறப்புகளைப் பேசினார். அதில் குறிப்பாக தன்னை மிகவும் அலைக்கழித்த கதையாக ‘நாகம்’ சிறுகதையைக் குறிப்பிட்டார்.

இம்மூன்று கதைகளும் அசாத்தியமான கதைகளாகவும் குறிப்பிட்டார். அதையடுத்து, ‘மா.சண்முகசிவா சிறுகதைகள்’ குறித்து உரையாடினார். மா.சண்முகசிவாவின் சிறுகதையில் ‘எல்லாமும் சரிதான்’ எனும் கதையைப் பற்றி பேசுகையில் பவா வழக்கம்போல் கதைச்சொல்லியாக மாறிவிட்டார். அக்கதையைக் குறித்து சிலாகித்த பவா, இறுதியாக நவீன இலக்கியத்தின் தராசில் உதிரிமனிதர்களும் எளிய மனிதர்களுமே எப்போதும் உயர்ந்து இருப்பார்கள் எனக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.  

கலை இலக்கிய விழாவின் நிறைவு அங்கமாக எழுத்தாளர் சு.வேணுகோபால், ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ மற்றும் ‘அவரவர் வெளி’ நூல்கள் குறித்து தனது விமர்சன உரையைத் வழங்கினார். தனது உரையில் மலேசியாவின் தமிழ் இலக்கியத்தில் தொய்வு ஏற்பட்டதற்கு காரணமானவர்களைக் குறித்து கேள்வி எழுப்புகிறார். இரா.தண்டாயுதம் போன்றோர் முன்மொழிந்த தவறான எழுத்தாளர்களின் தாக்கம், நவீன இலக்கியத்தின் வருகையை தடை செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

2005-க்கு பிறகான மலேசியத் தமிழிலக்கிய மாற்றம் 1985- இல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி வருகைக்குப் பின் மாறியிருக்க வேண்டும், மாறாக அவரது வருகையும் ஒரு சடங்காக போய்விட்டதாக குற்றம் சாட்டினார். மீண்டு நிலைத்த நிழல்கள் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஓர் ஆவணமாகவும் அதனூடே வரலாறும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்நூலை ‘சுபமங்கலா’வில் வெளிவந்த எழுத்தாளர்களின் பேட்டியுடன் ஒப்பிட்ட சு.வேணுகோபால், ஆளுமைகளின் சீரழிவும் பதிவு செய்யப்பட்டதின் வழியாக இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை ம.நவீனை நோக்கி ‘நீ எழுத்தாளன், உன் வேலை இதுவல்ல…. நீ தொடர்ந்து சிறுகதைகளை எழுத வேண்டும்.ஆனால் இதை நீ செய்யாவிட்டால் வேறு யார் செய்வதென்றும் தெரியவில்லை’ என கேள்வியையும் கோரிக்கையும் முன்வைத்தார். தொடர்ந்து ‘அவரவர் வெளி’ நூல் குறித்த பேசிய சு.வேணுகோபால், மலேசியத் தமிழ் இலக்கியத்தில் முன்னோர்களை உருவாக்க தவறிவிட்டதாகவும் அது அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க முடியாமலும் போய்விட்டதாக குற்றம் சாட்டினார். அதற்கு விமசர்னம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. க.நா.சு போன்றவர்கள் முன்னெடுத்த கறாரான விமர்சனமும் அதன் மூலமாக அவர்கள் தொகுத்த ஆளுமைகள் போன்று மலேசியாவில் விமர்சனம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றார். 1950-இல் வரவேண்டிய இந்நூல் காலம் கடந்து 2018-இல் வெளிவந்திருப்பதாக குறிப்பிட்டார். இந்நூல் காழ்ப்புணர்ச்சியற்று, யாரையும் அடித்து வீழ்த்தாமல் படைப்புகள் சார்ந்து உரையாடியிருப்பதாக குறிப்பிட்டு தனது உரையை முடித்துக்கொண்டார்.

விழாவின் நிறைவாக வருகையாளர்கள் பவா உடனும் சு.வேணுகோபாலிடம் உரையாடி படம் பிடித்துக்கொண்டனர். வல்லினம் குழுவினர் வழக்கமாய் குழுப்படம் ஒன்றைப் பிடித்துக்கொண்டனர். நான்கு மணி நேரம் குழுமியிருந்த அறை வேகமாக காலியாகிக் கொண்டிருந்தது. மீண்டும் எப்போது இங்கு இத்தனைப் பிரமாண்டமான இலக்கியக்கூட்டம் கூடப்போகிறது எனும் கேள்வியுடன் அறைக்கதவு சாத்தப்பட்டது.

- வெங்கடேஷ் -

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz