நலிந்து வரும் மண்பானை தயாரிப்புத் தொழில். வேலையிழந்த தொழிலாளர்கள் பிழைப்பைத் தேடி வெளியூர் செல்லும் அவலம்!

Monday 17, December 2018, 18:37:06

தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மட்பாண்டம் செய்யும் தொழிளார்கள் இருந்தாலும் அதியமான் கோட்டை பகுதியில் குயவர்கள் சமூகத்தினரால் பாரம்பரியமாக வனையப்படும் மட்பாண்டங்களுக்கு எனத் தனி மதிப்பு உண்டு.

இங்கு பானை வினைபவர்களுக்கு கார்த்திகை தீபம், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களில் அதிகப்படியான வருவாய் தரும் தொழிலாக உள்ளது. மற்ற நாட்களில் உண்டியல் தயாரித்தல், கோவில்கள் மற்றும் வீட்டுச் சிறப்பு நிகழ்வுகளின் பூஜைக்கென சிறிய அளவிலான பானைகளைத் தயாரித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

சமீப காலமாக அரசாங்கம் அனுமதித்ததை அடுத்து, மராமத்து பணிகளுக்காக ஏரியில் உள்ள மண்ணை விவசாயிகள் அள்ளி சென்றதால் ஏற்பட்ட மண் பற்றாகுறை காரணமாக பல மட்பாண்டத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வெளியூரில் இருந்து மட்பாண்டம் செய்ய மண்ணை விலைக்கு வாங்கி வந்தாலும் பானைகள் தயாரித்தால் தரமாக வருவதில்லையாம்.

பானை வனைவதை பாரம்பரியத் தொழிலாகக் கொண்டுள்ள  அதியமான் கோட்டைப் பகுதி பானை வினைஞர்களில் பலர் தங்களது தொழிலில்  போதிய வருமானம் இல்லாததால் மாற்றுத் தொழிலைத் தேடி வெளி மாவட்டங்களுக்குச் சென்று விட்டனர். ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கானோர் செய்து வந்த இந்தத் தொழிலில் தற்பொழுது மிகக்  குறைவான தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு ள்ள 35 தொழிலாளர்களுக்கு அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட நலிவடைந்த தொழிலாளர்களுக்கு இதுவரை அரசின் உதவித்தொகை கிடைக்கவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz