பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தர்மபுரியில் கிளீன் தகடூர் மராத்தான் – 5K ஓட்டப் பந்தயம்!

Friday 28, December 2018, 17:56:57

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986'ன் படி, தமிழக அரசு பல்வேறு முயற்சி மற்றும் செயல்திட்டத்தினை முன்னெடுத்துவருகிறது.

இதன் தொடர்சியாகப் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாற்றுப் பொருட்களின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் சுடர் வெல்பேர்  பவுண்டேசனுடன் இணைந்து நடத்தும் ”கிளீன் தகடூர் மராத்தான் – 5K” எனும் தொடர் ஓட்டப் போட்டி வருகின்ற 06.01.2019 அன்று தர்மபுரி மாவட்டத்தில் நடத்த உள்ளது.

இதில் கலந்து கொள்ள கர்நாடகம்-27பேர், பாண்டிச்சேரி-14பேர், தெலுங்கானா-03பேர், பஞ்சாப்-05பேர் மற்றும் தமிழ்நாட்டில்--16173பேர் என மொத்தம் 16,222 மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள டி-ஷர்ட், தொப்பி, பதக்கங்கள், அடையாள எண்கள் ஆகியவற்றை தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் இன்று (28-12-2018) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

பதிவு செய்த போட்டியாளர்களுக்கு 02-01-2019 முதல் SMS மூலமாக அடையாள எண்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் 06-01-2019 அன்று காலை 5.30 மணி முதல் போட்டியாளர்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையினை உடன் எடுத்து வந்து அவரவர்களுக்கான எண், தொப்பி உள்ளிட்டவற்றை நேரில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தொடங்கி, தர்மபுரி சசி ஞானோதயா அகாடமி CBSE பள்ளியில் முடிவடைகிறது. 06.01.2019 அன்று காலை 7 மணிக்கெல்லாம் ”கிளீன் தகடூர் மராத்தான் – 5K” போட்டி சரியாகத் தொடங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

               

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz