திருவாரூர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு!

Friday 04, January 2019, 23:46:54

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. நேற்று வேட்பு மனு தாக்கலும் துவங்கிய நிலையில்   திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று இந்த 3 கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று காலை அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டார். இவர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். ஜெ.மறைவுக்குப்பின் தினகரன் ஆதரவாளராக இருந்து வருகிறா். தற்போது அ.ம.மு.க. மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 

இந் நிலையில் தி.மு.க.வும் தனது வேட்பாளரைக் களத்தில் இறக்கியுள்ளது.  திருவாரூரில் தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கலைவாணன் 2006-11வரை ஊராட்சி கவுன்சிலராகப் பதவி வகித்தார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.

நாளை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz