ஓசூர்: பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையைப் பாரமென கடும் குளிரில் வீசிவிட்டுத் தலைமறைவான தாய்....

Wednesday 16, January 2019, 20:57:36

பெண் சிசுக் கொலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இணையான சம்பவங்கள் கிருஷ்ணகிரியினை உள்ளடக்கியதான பழைய தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் நடந்து வந்தது. இது குறித்து தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளின் காரணமாகவும், பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் காரணமாகவும் நாளடைவில் அது வெகுவாகக் குறைந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக மாற்றப்பட்ட கிருஷ்ணகிரியில் அண்மைக் காலமாக பெண்சிசு புறக்கணிப்பு அவலங்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாகக் சமூக ஆர்வலர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

அதை மெய்ப்பிக்கும் வண்ணமாக, பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையைத் தனக்குப் பாரமாகக் கருதிய தாய் அக் குழந்தையினைத் துணியில் சுற்றி  நடுக்கும் கடும்  குளிரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே வீசிச் சென்றுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.

ஓசூர் நகரின் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் முக்கிய இடங்களில் ஓசூர் உழவர் சந்தையும் ஒன்று. நேற்று காலை உழவர் சந்தையின் ஒதுக்குப் புறத்தில் குழந்தை ஒன்று வீறிட்டு அழும் குரல் தொடர்ந்து கேட்டவாறு இருந்தது.

இதைத் தொடர்ந்து சந்தைக்கு வந்த பொதுமக்களில் சிலர் குழந்தை அழுகுரல் சத்தம் வந்து கொண்டிருந்த  இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று குளிரில் நடுங்கியபடி அழுது கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து, ஓசூர் நகரக் காவல் நிலையத்திற்குப் பொதுமக்கள் தகவல் தந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  ஆம்புலன்சை வரவழைத்து அந்தப் பெண்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள  பச்சிளம் குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தை அருகே குழந்தையினை வீசிச் சென்றது யார் என்பதைக் கண்டறிய சந்தையினைச் சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள  சிசிடிவி கேமராக்களின் மூலமாகப் படமாகியுள்ள காட்சிகளைப் பார்த்து போலீசார் புலனாய்ந்து வருகின்றனர்.  .

குழந்தை வேண்டி கோவில் கோவில்களாக சுற்றி வரும் தம்பதிகள் ஒருபுறமிருக்க பிறந்து ஒரு மாதமேயான அழகான பெண் குழந்தையை பாரமாக நினைத்து பெற்றோரே போட்டுச் சென்றிருப்பது, ஓசூர் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz