மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

Wednesday 16, January 2019, 19:02:39

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி நேற்று மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்காவுக்கு திடீரென சென்றுள்ளார்.

66 வயதான மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த சமயத்தில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை சீரானதை அடுத்து, கடந்தாண்டு, ஆக., 23ல், மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை, அருண் ஜெட்லி ஏற்றுக் கொண்டார்.

மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட்டை, வரும், பிப்., 1ல் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், பொதுத் தேர்தலுக்கு முந்தைய, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக, நேற்று, மருத்துவ பரிசோதனைக்காக, அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றுள்ளார். அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz