வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவல் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயல்வதால் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

Monday 28, January 2019, 18:29:00

வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவல் மூலம் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக   ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் தந்த கோரிக்கையும், உச்சநீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையும் வேறு மாதிரியாக உள்ளது என மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.

இவ்வழக்கு கடந்த முறை விசாரிக்கப்பட்டபோது, வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராத தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்ப்பது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவல் மூலம் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது என்றும் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் தந்த கோரிக்கையும், உச்சநீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையும் வேறு மாதிரியாக உள்ளது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

எனவே வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருப்பதால், உரிய நடைமுறைகளை பின்பற்ற வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும், அதை போல  தவறான தகவல்களை கொடுத்து ஆலையை திறக்க முயல்வதால் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு கோரியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz