2019-20 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

Friday 01, February 2019, 17:54:37

அனைவரது தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் உள்ளது மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் : பிரதமர் மோடி

அனைவரது தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் அவர் கூறியதாவது,'தேர்தலுக்கு பின் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வளர்ச்சி பாதைக்கான ட்ரெய்லர்தான் இடைக்கால பட்ஜெட்;மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டானது நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைவருக்குமானது.

நாளொன்றுக்கு 17 ரூபாய் என அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு அவமதிப்பு : ராகுல் காந்தி 

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நாளொன்றுக்கு 17 ரூபாய் என அறிவித்து விவசாயிகளை அவமதித்து விட்டீர்கள் என விமர்சித்துள்ளார். மேலும் பிரதமரின் திறமையின்மை, அடாவடித்தனத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை திட்டம் வரவேற்கத்தக்கது : தமிழிசை

சென்னை : வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெற வேண்டும் என்ற வகையில் மத்திய இடைக்கால பட்ஜெட் உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை திட்டம் வரவேற்கத்தக்கது என்றும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பானதால் வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என அவர் தெரிவித்தார்.

மாதம் ஒன்றுக்கு ரூ. 500 வைத்து விவசாயிகள் கவுரமாக வாழ முடியுமா ?: காங்கிரஸ் எம்பி சசிதரூர் கேள்வி.

டெல்லி : 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், மாதம் ஒன்றுக்கு ரூ. 500 வைத்து விவசாயிகள் கவுரமாக வாழ முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டு உதவித் தொகை ரூ.6,000 அறிவித்தது குறித்து காங்கிரஸ் எம்பி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பொய் மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம - திருநாவுக்கரசர்

சென்னை : இந்திய மக்களுக்கு பொய் மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் மத்திய பட்ஜெட் பொது தேர்தலுக்கான கவர்ச்சிகரமான அறிவிப்பாக மட்டுமே தெரிகிறது என்றும், மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்துடன் கூடிய முழுமையான பட்ஜெட் : ப.சிதம்பரம்

டெல்லி : நாடாளுமன்றத்தில் பியூஸ் கோயல் தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட் அல்ல, தேர்தல் பிரசாரத்துடன் கூடிய முழுமையான பட்ஜெட் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் பட்ஜெட்டில் தவறான புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளதாகவும், சிறு விவசாயிகளுக்கு மார்ச்சில் ரூ.2,000 தருவது ஓட்டுக்கான பணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

வாக்குகளை வாங்க வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலை: டிடிவி தினகரன்

டெல்லி : 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய டிடிவி தினகரன் ,வாக்குகளை வாங்க வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். மேலும் 4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று கூறிய அவர், தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.5லட்சமாக உயர்த்தி இருப்பது மக்கள் பட்ட காயங்களுக்கு சிறு ஆறுதல் என்றும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கென தனித்துவமான திட்டங்கள் இல்லாதது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறினார்.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz