மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது!

Tuesday 19, February 2019, 17:54:40

நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்களே என்ற அறிவிப்பினை இன்று மாலை சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் வைத்து செய்தியாளர்கள் முன்பு ஓ.பி.எஸ்.அறிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினருடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கின்றன. திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி அறிவிக்கப்படாத கூட்டணியாக இருந்தாலும் நாளை தொகுதி பங்கீட்டுடன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சென்னை நந்தனத்திலுள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் அதிமுக-பாமக இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 19) காலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக-பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம், ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அண்மையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்து அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்ற பின்னர் இன்று மீண்டும் 2-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு என்பதில் இருதரப்பும் மகிழ்வோடு கையொப்பமிட்டது.

21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாஜக அதிமுகவுக்கு தார்மீக ஆதரவை வழங்கும் என்றும் ஓ.பி.எஸ். தெரிவித்தார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம் என்பதால் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு 5 மணிக்கு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியானது.

பாஜகவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, பொள்ளாச்சி, திருப்பூர், தென்சென்னை ஆகிய 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக-பாஜக கூட்டணியை அறிவித்தது தேர்தல் களத்தை சூடாக்கி உள்ளது.  இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தமிமுன் அன்சாரி இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால், அதிமுகவின் தோழமை கட்சியாக செயல்பட்டு வந்த, எம்.எல்.ஏ., கருணாஸ், எம்.எல்.ஏ., தனியரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz