அதிமுகவுடன் கூட்டணி சேருவதால் பாமகவின் கொள்கை முடிவில் எள்ளளவும் மாற்றம் இராது - மருத்துவர் அன்புமணி உறுதி

Monday 25, February 2019, 18:16:44

அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி விளக்கம் தந்தார்.

அன்புமணி - செய்தியாளர் சந்திப்பின் முக்கிய பகுதிகள் இதோ.....

கடந்த ஆண்டு பாமகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து  முடிவெடுக்கும் அதிகாரம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் பாமக நிறுவனர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை வைத்து மருத்துவர் அய்யா அவர்கள் அண்ணா திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

இந்த முடிவு ஒரு கூட்டு முடிவு. அய்யா அவர்கள் எங்கள் கட்சியில் உள்ள அடிமட்டத் தொண்டன் மற்றும் நிர்வாகிகளை அழைத்து கூட்டாகவும், தனித்தனியாகவும் பேசி இந்த முடிவினை எடுத்திருக்கிறார்கள். ஆகா இது எங்கள் கட்சியின் முடிவு. அய்யா எடுத்த முடிவு. கூட்டாக எடுத்த முடிவு.

இந்த முடிவுக்குப் பிறகு அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அந்த ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதிய பத்து அம்சக் கோரிக்கையினை நிறைவேற்றும்படி முதலமைச்சரிடம் கொடுத்தோம்.

கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவுடனேயே கூட்டணி அமைக்கலாமா என்று கேள்வி கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் எந்தக் கட்சியும் இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே முடியாது.

கடந்த காலங்களில் காங்கிரசை திமுக செய்யாத விமசனமா? இந்திராகாந்தியை எப்படியெல்லாம் திமுகவினர் விமர்சனம் செய்தார்கள்? திருமாவளவன் ஸ்டாலினையும், திமுகவையும், காங்கிரசையும் விமர்சித்ததைப் போல யாரும் செய்திருக்க முடியாது. இப்போது அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கிறார்களே அவர்களை யாரும் கேட்க மாட்டார்களா? அதே போலே கம்யூனிஸ்ட்களும், வைகோவும் திமுகவையும் காங்கிரசையும் கடுமையாக விமர்சித்து அவர்களுடனே தற்போது இணையவில்லையா?

விமர்சனம் செய்தோம்; அதை மறுக்கவில்லை. விமர்சனம் செய்தால் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று இருக்கிறதா? திமுக பாஜகவை விமசனம் செய்துவிட்டு அவர்களுடன் கூட்டணியில் போனார்கள். எங்களுடைய நோக்கமே தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் நாங்கள் இந்த முடிவினை எடுத்துக் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

விமர்சனம் வைத்ததோடு நீங்கள் நின்றுவிடவில்லை. அதிமுக அமைச்சரவையின் ஊழல் குறித்து ஆதாரபூர்வமாகக் குற்றச்சாட்டுகளை கவர்னரிடத்திலே நேரில் சென்று கொடுத்து, அதனை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டு பொதுமக்களுக்குத் தந்தீர்கள். குட்கா முதல் முட்டை கொள்முதல் வரையில் பலவகைகளிலும் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனேயே இப்போது கூட்டணி அமைக்கக் காரணம் என்ன? ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஏன் உங்களால் கோரிக்கை வைக்கப்படவில்லை? இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை; யாருக்கும் எங்களின் ஆதரவைத் தரப்போவதில்லை என்று சொல்லி இருந்தீர்கள் அந்த நிலைப்பாட்டினை இப்போது மாற்றிக் கொள்ளக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது.

ஆளுநரிடம் நாங்கள் குற்றச்சாட்டினைத் தந்தோம். உண்மைதான். யார் தவறு செய்தார்களோ அவர்கள் விசாரிக்கப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் இன்றைக்கும் மாறுபாடு இல்லை.

2010 பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்தோம். அந்த அறிவிப்பின்படி இந்த இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆதரவு தருவதாகச் சொல்லவில்லை.

எல்லாக் காட்சிகளில் இருந்து மாறுபட்டது பாமக என்று சொல்லுகிறீர்கள். தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதில் மற்றக் கட்சிகளைப் போலவே  நாங்களும் ஒரு சராசரிக் கட்சிதான் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

மக்களுக்காகக் கடுமையாக நாங்கள் உழைத்தோம். தேர்தல் நேரத்தில் ஊர் ஊராகப் போய் ஓட்டுக் கேட்டோம். எல்லாம் பாராட்டினார்கள்; ஆனால் ஓட்டுப் போடவில்லை. கடந்த நான்கு தேர்தல்களில் எங்கள்ளல் வெற்றியினைப் பெற முடியவில்லை. எனவே எங்கள் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு எங்கள் வியூகத்தினை மாற்றி அமைத்திருக்கிறோம்.

இந்தக் கூட்டணி சேருவதால் பாமகவின் கொள்கை முடிவில் எள்ளளவும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நாங்கள் போராடிய பிரச்னைகளுக்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம்; வலியுறுத்துவோம். கடந்த காலங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து விட்டுத்தான் பின்னர் கூட்டணியினை வைத்தோம். அந்த விமர்சனங்கள் தமிழர் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் தான்” என்றார் அன்புமணி.

“கூட்டணி மாற்றம் குறித்து இப்படியெல்லாம் காரணங்கள் சொல்லி சமரசம் செய்து விளக்கம் கொடுப்பது உங்களுக்கு நெருடலாகப் படவில்லையா?” என்று அவரிடம் கேட்கப்பட்ட வினா அன்புமணியை ரொம்பவுமே சூடாக்கியது.

“இந்தக் கூட்டணியினை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டது. அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நீங்கள் ஏற்கவில்லை என்றால் எனக்கு அது கவலையே கிடையாது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அது எனக்குக் கவலையே கிடையாது” என்றார் உஷ்ணமாக.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக நீங்கள் திமுகவுடன் பேசினீர்களா? இல்லையா? என்று அன்புமணியிடம் வினா தொடுக்கப்பட்டது.

கூட்டாணி முடிவாவதற்கு முன்பாக தமிழகத்தில் உள்ள எல்லா பிரதானக் கட்சியினருமே எங்களை அணுகினார்கள், திமுக உட்பட. ஒரு தேர்தலின்போது இது இயல்பு.

எங்களின் அணி பெரும் வெற்றியினைப் பெறப் போகிறது என்பது என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்ததாலோ என்னவோ தோல்வி பயத்தால் எங்களைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் நாங்கள் அவரைப் பற்றி அதுபோல விமர்சிக்க மாட்டோம்" என்றார் அன்புமணி முத்தாய்ப்பாக.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz