கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

Sunday 10, March 2019, 15:14:39

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடும் என்று உறுதியாகி உள்ளது. இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடனும் கூட்டணி என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை.

அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் தனியாக போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். இதற்காக அவர் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர் நேர்காணல் தற்போது மக்கள் நீதி மையம் சார்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. கருப்பு வெள்ளையில் இருக்கும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினைத்  தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது அங்கீகாரம் பெறாத கட்சியாக உள்ள  மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் அவர்கள் விரும்பிய சின்னத்தில் போட்டியிட முடியாது. ஆனால் விரும்பிய சின்னம் குறித்து கோரிக்கை வைத்து அது இருக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இதையடுத்து தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னத்தில் உள்ள டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தையே தங்களது கட்சியின் சின்னமாக அறிவித்து போட்டியிட உள்ளது.

மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கப்பட்டுள்ள பேட்டரி டார்ச் சின்னம் மிகப் பொருத்தமானது. தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும் இந்திய அரசியலுக்கும் புதிய ஒளியை பாய்ச்சுவோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz