பதவியிழந்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு

Monday 25, March 2019, 17:42:52

கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

இதன் காரணமாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் மீதும் மற்றும் அந்த வழியாக வந்த பேருந்துகளின் மீது போராட்டம் நடத்தியவர்கள்  கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறை குறித்து விசாரித்த போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று 108 போ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில்  16 போ் முதன்மைக் குற்றவாளிகள் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் என்று போலீசாரால் அறிவிக்கப்பட்ட 16 பேரில் முன்னாள்  மந்திரி பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர்.

இந்த வழக்கினை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் பலகிருஷ்ணரெட்டிக்கு மீதான வழக்கை விசாரித்து மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இதன் காரணமாக பாலகிருஷ்ணரெட்டியின் எம்எல்ஏ பதவியும், அமைச்சர் பதவியும் பறிபோனது. இதனையடுத்து, அவரது ஓசூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அங்கு இடைத் தேர்தலும் நடத்தப்படுகிறது.

தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப் போவதால் பாலகிருஷ்ணரெட்டி தனக்கு வழங்கப்பட்டுள்ள  தண்டனையினை நிறுத்தி வைக்குமாறு முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  பாலகிருஷ்ணரெட்டிக்கு வழங்கப்பட்ட  தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு வழங்கபட்ட தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாலகிருஷ்ணரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தண்டனையினை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனைத் தொடர்ந்து  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யாமல் தண்டனையை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz