ஊழலின் பிடியில் செயலிழந்த மேச்சேரி பேரூராட்சி – தி.மு.க. குற்றச்சாட்டு!

Friday 31, August 2018, 10:24:33

மேச்சேரி பேரூராட்சி ஊழலின் பிடியில் செயலிழந்த நிலையில் இருப்பதாக தி.மு.க.தலைமைக் கழக தேர்தல் பணிக்குழுச் செயலாளரும், மேட்டூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

மேச்சேரி பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவை குடிநீர். ஆனால், 18வார்டுகளிலும் குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி முழுவதும் அகற்றப்படாத குப்பைகள் ஒரு புறம் மக்களை சிரமத்துக்குள்ளாக்குகிறது.  ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் இவற்றால் உற்பத்தியாகி படையெடுக்கும் கொசுக்களால் மக்கள் அல்லலுறுகின்றனர்!

முறையாக வரி செலுத்தியும் பேரூராட்சி அலுவலர்களின் கோரப்பிடியில் மக்கள் துன்பப்படுகின்றனர்!

மேச்சேரி பத்ரகாளியம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்லும் இடமான மேச்சேரியில் அதற்குண்டான போதிய வசதிகள் செய்து தரப்படாத நிலைமையே உள்ளது.  

இந்த நிலைக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனம், தமிழக அரசின் திறமையற்ற நிர்வாகம் இந்த இரண்டுமே காரணம் என இங்குள்ள மக்கள் குமுறுகின்றனர்.  

இந்தப் பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன். விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz