வாழ்வின் தொல்லைகளா வயதான பெற்றோர்கள்?

Monday 01, April 2019, 13:51:52

சிறப்புக் கட்டுரை

.கல்கி

தொழில்நுட்பத்தால் சுருங்கிவிட்ட இயந்திரத்தனமான இன்றைய உலகில் பெற்றோர்களோடு வாழ்வதைத் தொல்லையாகவும், அவமானமாகவும் கருதும் பலர்  தங்களின் வயதான பெற்றோர்களைத் தனித்தும், முதியோர் காப்பகங்களிலும் விட்டு விட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

இன்னும் சிலர் தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, நல்லதொரு தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தத் தங்களின் பெற்றோரை ஏதுமற்றவர்களாக  தெருவில் அலைய விட்டு விடுகின்றனர். தான், தன் பெண்டு, தன் பிள்ளை என்று தங்களைச் சுருக்கிக் கொண்டு சுயநலத்தோடு, மனிதநேயமின்றி வாழும் அவலத்தைத் தங்களது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

இவையெல்லாம் நாகரீக வளர்ச்சியல்ல; இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமுமாய் நன்றி கெட்ட மிருகங்களாக மனிதர்கள் மாறிக் கொண்டிருப்பதற்கான அடையாளங்கள். இந்த உலகையே மாற்றியமைக்க வல்ல அதி நவீனத் தொழில்நுட்பங்களும், ஆற்றல்மிகு  இயந்திரங்களும்,   வந்தாலுமே கூட கருப்பையால் மட்டுமே குழந்தையைச் சுமக்கவும், பெற்றெடுக்கவும் முடியுமென்பது தான் தாய்மைக்கேயுரிய தனி மகத்துவம். தாய் தனது ஆயுளையே தன் குழந்தைகளுக்காக அர்ப்பணித்து விடுகிறாள் என்றால் அது மிகையல்ல.

குழந்தை வளர்ப்பும், குடும்ப வாழ்க்கையும் அவ்வளவு சுலபமானது அல்ல. குடும்ப வாழ்க்கைக்காகவும்,  குழந்தைகளின் நலனுக்காகவும் ஒவ்வொரு பெற்றோரும் தம் வாழ்நாட்களின் பெரும்பகுதியினைச் செலவு செய்கிறார்கள். ஆம்.  குழந்தை வளர்ப்பு , கல்வி,  மருத்துவம்,  திருமணமென ஒட்டுமொத்த தேவைகளுக்காய் அவர்கள் இடையறாது ஓடிக் கொண்டிருப்பார்கள்.

இதன் காரணமாக ஓய்வு என்பதை அவர்கள் தம் வாழ்நாட்களில் தேவையில்லாதது என்றே கருதுகிறார்கள். பிள்ளைகள் நலனுக்காகவே வாழ்ந்து வரும் பெற்றோருக்குப் பிள்ளைகள் ஒருபோதும் சுமையாகத் தெரிவதில்லை. முற்றிலும் தங்கள் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவுமே வாழ்வதையே அவர்கள் மகிழ்வாகக் கருதுகிறார்கள். ஆனால், அம் மகிழ்ச்சி அவர்களின் இறுதிக் காலத்தில் நிலைபெறுகிறதா? என்றால் இல்லை. யாருக்காக வாழ்ந்தார்களோ அவர்களாலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனை!

தமக்கான  ஒருவேளை உணவும் தங்குவதற்கான இடமும் மறுக்கப்படும் சூழலில்தான் வயதான பெற்றோர்களில் சிலர் சமயங்களில் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். மரணிப்பதல்ல அவர்களின் நோக்கம். உயிராகத் தாங்கள் வளர்த்த தங்கள் பிள்ளைகள் உதிர்ந்த ரோமங்களாகத் தங்களை ஒதுக்கி வெளித்தள்ளும் புறக்கணிப்பை அவர்களால் தாங்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை என்பதுதான் அதற்கான நிஜக் காரணம்.

தாங்கிப் பிடிக்க ஆயிரம் கைகள் இருந்தாலும் தன் மகனின் கைகளைப் பற்றியோ, மகளின் தோள்களில் சாய்ந்து கொன்டோ தங்களது இறுதிக்காலம் நகர்வதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

தன் விரல் பிடித்து நடந்த குழந்தை தன்னைத் தாங்கிப் பிடிக்குமென்ற பெரும் நம்பிக்கை உடைந்து போகும் நேரங்கள் மிகவும் கொடுமையானது. தோள்களில் சுமந்து வலம் வந்து உலகையே ஒற்றை விரலால் சுட்டிக் காட்ட முடியுமென்று அவர்கள் கொடுத்த நம்பிக்கை உடைந்து போகும் போது, அவர்கள் மனம் துவண்டு போய் விடுகிறது.

பெரும்பாலான பெற்றவர்கள் தன் பிள்ளைகளின் குறிப்பறிந்து அவர்கள் விரும்பியவற்றைக் கேட்பதற்கு முன்பே வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தத் தருணங்கள் எண்ணிலடங்காதவை. அவர்கள் தங்கள் குழந்தைகள் எப்படி உடுத்த வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? எப்படி உண்ண வேண்டுமென்று என எல்லாமுமாய் அனுதினமும் முற்றிலும் குழந்தைகளுக்காகவே வாழ்ந்திருப்பார்கள்; இறுதிவரை வாழ்ந்து கொண்டும் இருப்பார்கள்.

பிள்ளைகளே அவர்களை உதறித் தள்ளினாலும் கூட பெற்றவர்களால் அவர்களால் வெறுக்கவே முடியாது. மாறாக, அந்தப் பிள்ளைகளை மறுபடி  எப்படிப் பார்க்க முடியும் ? என்ற கவலைதான் அவர்களுக்குள் மேலோங்கி நிற்கும்.

பெற்றோர்களின் நேசிப்பு ஆழமானது; பொய்க் கலப்பில்லாதது. எளிதாய் யாராலும் கணக்கிட முடியாது. துளியும் சுயநலம் அற்றது. தங்களையே உலகமாகச் சுற்றி வாழ்ந்த தங்கள் பிள்ளைகள்  இன்புற்று இறுதிவரை வாழ வேண்டுமென்ற பேராசை மட்டுமே அவர்களுக்குள் பெரிதாய் நிறைந்திருக்கும்.

வயோதிக காலத்தில் பெற்றோர்களை வெறுத்து ஒதுக்காதிருங்கள். உங்களுடைய நேரத்தை அவர்களோடும் செலவிடுங்கள். அவர்களுக்கு தேவைப்படும் ஆறுதலே அன்பு ஒன்றுதான். தங்கள் பிள்ளைகளுடன் வாழும் இல்லத்திலும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதிலும்தான் அந்த அன்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

காலம் என்னும் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் எல்லோருடைய முதுமையும் கட்டாயம் வரையப்படும். அது அழகானதாக அல்லது அலங்கோலமானதாக வரையப்படுவது அவரவர்கள் வாழ்ந்து காட்டுவதில்தான் உள்ளது.

வயோதிகம் என்பது எல்லோரையும் வந்து சேரும். இன்று நம்முடைய பெற்றோரின் வயோதிகம் நாளை நமக்கும் வரக் காத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள். இன்று நீங்கள் உங்களது பெற்றோர்களுக்குச் செய்யும் மரியாதையோ அல்லது அவமதிப்போ நாளை உங்களுக்கு உங்கள் குழந்தைகளால் நிச்சயமாக இரட்டிப்பாய்க் கிடைக்கும் என்பதை உணர வேண்டும்.

பெற்றோர்களைக் குழந்தைகளாகப் பாவித்து பிரியம் செலுத்துங்கள். மனோதைரியத்தையும், ஆரோக்கியத்தையும் சிதைக்கும் வயோதிகத்தின்போது பெற்றவர்களுக்கு ஆறுதலாகக் கரம் பற்றி அவர்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள்.

அவர்கள் அழும் பொழுது ஆறுதலாகவும், மகிழ்வுரும் போது மகிழ்ந்திருப்பதற்கான அரணாய் நில்லுங்கள். பெற்றோர்களைப் பேணிக் காப்பதை விடப் பெரும் பாக்கியம் வேறொன்றும் இல்லை. பெற்றோர்கள் சுதந்திரமாய் வாழ வேண்டியவர்கள். அவர்களை ஒரே அறைக்குள் அடைத்து வைப்பதையும், கட்டுப்பாடுகளோடு நடத்துவதையும் தவிருங்கள். மாறாக, அதிக அன்பும் அக்கறையும் செலுத்துங்கள்.

உங்களைச் சுமந்தவர்களை நீங்கள் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை; அவர்களைத்  தூக்கியெறிந்து விட வேண்டாம். உங்களை நினைத்து அவர்கள் அழும் ஒவ்வொரு துளி கண்ணீருக்குமான  விலையை காலம் உங்களுக்குத் தர நிச்சயம் காத்திருக்கும்.

துடித்துக் கொண்டேயிருக்கும் இதயம் என்றோ ஓர் நாள் நின்று போகும் வரை அதன் மதிப்பையும், இழப்பையும் யாராலும் உணர முடிவதில்லை. அதுபோல், பெற்றோரின் மதிப்பும், இழப்பும் காலம் கடந்தே சிலருக்குப் புரிகிறது.

தேடி விலை கொடுத்தாலும் எளிதில் வாங்கிவிடக் கூடிய கடைச்சரக்கல்ல  பெற்றோரின் அன்பு. நம்மைப் பெற்றவர்கள் விலை மதிப்பில்லாத பெரும் சொத்தாக மதிக்கப்பட வேண்டியவர்கள். பெற்றோர்களைப் பேணிக் காப்பதை விடப் பெரும் பாக்கியம் ஏதுமில்லை!

சிறந்த பிள்ளைகள்தான் சிறந்த பெற்றோர்களாக முடியுமென்ற வருங்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். அவர்கள் நம்மோடு வாழ்வதை விடவும் பெருமை வேறென்ன இருந்துவிட முடியும்?

"தாய் தந்தையை பேண்" எனும் வாக்கு வாசிப்பதற்கு மட்டுமல்ல.

வாழ்ந்து காட்டுவதற்கும்தான்!

 

               

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz