மாற்றி மாற்றி பேசிக் கொண்டு, தானும் குழம்பி.. அடுத்தவரையும் குழப்புகிறார் ஸ்டாலின் - டிடிவி தினகரன் பேச்சு!

Wednesday 03, April 2019, 19:21:18

கோவை நாடாளுமன்றத்  தொகுதி, ஈரோடு நாடாளுமன்றத்  தொகுதிகளில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளரகளை  ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று  பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது தினகரன் பேசியதாவது:

இடைத்தேர்தலில் அதிமுக குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும்.

கொங்கு மண்டலத்தில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து, நிலங்களைப் பாழ்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டம் என்று சொல்லியபடி, மத்திய அரசின் கைக்கூலியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் என்று சொல்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியே அவரை பிரதமர் என்று சொல்லவில்லை. ராகுல்காந்தி பிரதமராக வர முடியாது.

ஒருபக்கம் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளது. ஆனால், வயநாட்டில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என இடதுசாரிகள் கூறி வருகிறார்கள். இது எப்படியான கூட்டணி என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறுபான்மையினரையும், தமிழக மக்களையும் குழப்புவதற்காக ஸ்டாலின் தானும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டு உள்லார்.

இந்த முறை மத்தியில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது. எனவே தமிழக மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவர்கள் கைகாட்டுவோர்தான் நாட்டின் பிரதமராக வரப்போகிறார்.

தமிழக மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கும் ஆளுங்கட்சிக்கு பதில் அளிக்கும் விதமாக, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களைக் கொண்ட, யாருக்கும் அடிபணியாத இயக்கமாக உள்ள, அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ள அமமுகவிற்கு மக்கள் இந்த முறை தங்கள் பொன்னான ஆதரவை அளிக்க வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz