கார் சக்கரங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியமானதா ? அவசியமல்லாததா ?

Friday 05, April 2019, 23:22:31

சிறப்புக் கட்டுரை

.கல்கி

பெட்ரோல் பங்குகளில் வாகனச் சக்கரங்களுக்காக காற்று நிரப்பும் பகுதியில் சாதாரண வாயு மற்றும், நைட்ரஜன் வாயு என இரு வேறு வாயுக்கள் வைக்கப்பட்டுள்ளதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

வாகன ஓட்டிகளில் பலரும் தங்கள் வாகனச் சக்கரங்களுக்காக சாதாரண வாயுவை நிரப்பிக் கொள்ள, நைட்ரஜன் வாயுவைப்  பற்றி அறிந்த ஒரு சிலரே அதனைத் தங்கள் வாகனச் சக்கரத்துக்கு ஏற்ற வாயுவாகத் தேர்வு செய்து நிரப்பிக் கொள்கிறார்கள்.

சரி.... சாதாரண வாயுவுக்கும், நைட்ரஜன் வாயுவுக்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு இருந்து விடப்போகிறது? எதற்காக சாதாரண வாயுவை விடுத்து நைட்ரஜன் வாயுவை நிரப்ப வேண்டும்? என நம்முள் வினாக்கள் எழலாம்.

கோடை காலத்தில் கார் டயர் டியூபுக்குள் ஏற்றப்பட்டுள்ள காற்று வெப்பத்தால் விரிவடைவதனால் அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக வெடிப்பதும், அதனால் பெரிய விபத்துக்களும், சில சமயங்களில் உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதும் நாம் அறிந்ததே. உதாரணத்திற்கு ஒவ்வொரு 10 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை உயர்வுக்கும் 1.9% அளவுக்கு காற்றழுத்தத்தில் வேறுபாடு ஏற்படும். அதாவது, 0.9 பிஎஸ்ஐ அளவு காற்றழுத்தம் மாறுபடும்.

சாதாரண காற்றைவிட நைட்ரஜன் வாயுவானது குளிர்ச்சித்தன்மை மிகுந்தது. இதனால், வெளிப்புற வெப்பநிலை மற்றும் உராய்வு காரணமாக  டயர்கள்  சூடான போதிலும் நைட்ரஜன் வாயுவின் வெப்பநிலையில் அதிக மாற்றம் ஏற்படாது. உட்புற டயர் பகுதிகளை குளிர்விக்கும் பணியை நைட்ரஜன் வாயுவானது செய்கிறது. இதன் மூலம் வெளிப்புற வெப்பநிலை மாறுபடுவதாலும் கூட டயர்களினுள் பாதிப்பு ஏற்படுவது இல்லை.

இதனால், நைட்ரஜன் வாயு நிரப்பிய டயர்களில் காற்றழுத்தம் ஒரே சீராக இருப்பதால் டயர் வெடிப்புக்கு வாய்ப்பு குறைவாகிறது. வல்லுநர்களும் இதைத்தான் உபயோகிக்கக் கூறுகிறார்கள்.

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் முதலில் வாகனங்களில் டயர், பிரேக் ஆகியவற்றை சரிபாத்துக் கொள்வது நல்லது. டயர்களில் நிரம்பியிருக்கும் காற்றின் அளவானது 32 பி.எஸ்.ஐ ( Pounds per Square Inch) இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதிகப்படியான லக்கேஜுகளை எடுத்துச் செல்வதாக இருந்தால் 33 பி.எஸ்.ஐ இருக்கும்படியாக வைத்துக் கொள்வதென்பது சிறந்தது.

டயர்களில் சாதாரண வாயுவைத் தவிர்த்து நைட்ரஜன் வாயு நிரப்பிச் செல்வது பாதுகாப்பானது. மேலும்,நைட்ரஜன் வாயுவை நிரப்பும்போது காற்றழுத்தம் சீராக பராமரிக்கப்படுவதால், மைலேஜ் சிறப்பாக இருக்கும். சாதாரண வாயுவை நிரப்பும்போது, அதில் இருக்கும் ஆக்சிஜன் ஆக்சிடேஷன் எனப்படும் வேதி மாற்றம் அடைந்து சில சமயங்களில் சக்கரங்களின் ரிம் பகுதியில் துருப்பிடித்து பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால், நைட்ரஜன் வாயு நிரப்பும்போது ரிம் பகுதி அதிக பாதிப்புகளை சந்திக்காது. இதுவும் .நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். மேலும், காற்றழுத்தம் அடிக்கடி குறைவதால் டயர் தேய்மானமும் அதிகரிக்கும். டயர்களை புதியதாக மாற்றுவது என்பது கார் பராமரிப்பில் மிகப் பெரிய செலவினங்களில் ஒன்று. எனவே, டயர் அதிக காலம் உழைப்பதற்கு, தடையற்ற சீரான பயணத்துக்கும் நைட்ரஜன் வாயு நிரப்புவது என்பது சிறந்த தேர்வு.

நைட்ரஜன் வாயு நிரப்புவதில் இருக்கும் ஒரே பாதகமான காரணமாகச் சொல்லப்படுவது இதற்கான கட்டணம் தான். சாதாரண வாயு என்பது எவ்வித கட்டணமும் இல்லாமல் பெட்ரோல் பங்குகளில் வழங்கப்படுகிறது. ஆனால், சில பெட்ரோல் பங்குகள் மற்றும் வாயு நிரப்பும் பணிமனைகளில் நைட்ரஜன் வாயு நிரப்புவதற்கு ஒரு டயருக்கு ரூ.20 வரை கட்டணமாகத் தர வேண்டியுள்ளது.

ஆனால், பல பெட்ரோல் பங்குகளில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் நைட்ரஜன் வாயு நிரப்பித் தரப்படுகிறது. இது வாகனங்களில் பயணிக்கும் நம் ஒவ்வொருவரின் உயிர் மற்றும் பாதுகாப்போடு தொடர்புடையது  என்பதை மனதில் கொண்டு வாகனங்களின் சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்புவது என்பதே சிறந்த தேர்வாக  இருக்கும்.

நைட்ரஜன் நிரப்புவதால் காற்றழுத்தம் அதிக வேறுபாடு இல்லாமல் சரியாக இருக்கும்போது பிரேக் சிஸ்டத்தின் செயல்பாடும் துல்லியமாக இருக்கும். காரை ஓட்டுபவருக்கோ, அமர்ந்திருப்பவர்களுக்கோ, அதிக சலிப்பு இல்லாததாகவும் பயணம் அமையும்.

நம் ஒவ்வொருவரின் உயிரும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டியது. பயணங்களின்போது நம்மை நேசிப்பவர்களுக்கும், நம்மோடு பயணிப்பவர்களுக்கும் பாதுகாப்பு குறித்தான அச்சங்கள் எழலாம்,

நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு விசயங்களும் பாதுகாப்பிற்கானது என்னும்போது அவற்றின் மீதான அச்சம் தேவையற்றது. பாதுகாப்பான பயணங்களை நீங்கள் மேற்கொள்ள விரும்பினால் கோடையில் நைட்ரஜன் வாயு நிரப்பிய டயர்களையே தேர்வு செய்யுங்கள் என்கின்றனர் தொழில் நுட்பவியாலாளர்கள்.

இதனை ஏற்று உங்கள் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz