போட்டியிடும் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் - வன்னியர் கூட்டமைப்பினர் அறிவிப்பு! 

Friday 05, April 2019, 22:48:33

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வன்னியர் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், எனவே 40 தொகுதிகளிலும் வன்னியர் கூட்டமைப்பினர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, பொதுச்சொத்து மற்றும் நல வாரியம் ஆகியவை திமுக ஆட்சி காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டது எனவும், எனவே தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவு அளித்து பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு ஊழல்களை செய்துள்ளதாகவும், குறிப்பாக 200க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தடை விதித்து பின்னர் அந்தத் தடையை நீக்கி அதில் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேபோல மூன்று பொதுத்துறை அரசு நிறுவனங்களை மூடி தனியார் துறைக்கு லாபம் ஈட்டும் வகையில் ஊழல் செய்துள்ளதையும், சுட்டிக் காட்டி பாமகவுக்கு எதிராக பிரச்சாரத்தினை அக் கட்சி போட்டியிடும் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz