அமைதிப் பேரணியால் அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் அங்கீகாரம் கிடைக்குமா?

Wednesday 05, September 2018, 23:31:28

தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரோடிருந்த வரை தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்காக அழகிரி எடுத்த முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. தற்போது கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அந்த முயற்சியில் மீண்டும் மும்முரமாகி இருக்கும் அழகிரி, கட்சியில் தான் இல்லாத போதிலும் தி.மு.க.வில் தனக்கிருக்கும் வலிமையை வெளிக்காட்டும் விதமாகவே இன்று அமைதிப் பேரணியினை அவர் நடத்தியுள்ளார் என்று தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் இன்று நடந்த அமைதிப் பேரணிக்கு வருவார்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக அழகிரி அறிவித்திருந்தார். எதிர்பார்த்த அளவிலான தொண்டர்கள் இன்று கூடவில்லை என்ற போதிலும் மிகப் பெரிய அளவிலான கூட்டம் இன்று அழகிரிக்காக சென்னையில் கூடியது என்னவோ நிஜம்.

இன்று சென்னையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து  கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்றைய அமைதிப் பேரணியில் ஒன்றரை இலட்சம் பேர் கலந்து கொண்டதாகவும். பேரணியில் கலந்து கொண்டதற்காகக் கட்சியில் இருந்து அவர்களை நீக்கி விட முடியுமா? என்ற கேள்வியினையும் எழுப்பினார்.

பேரணியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து வந்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் இன்று சென்னையிலேயே தங்கியுள்ளனர். நாளைக்கு அண்ணனுக்குத் தென்மண்டலப் பொறுப்பாளர் பதவி தரப்படுவது உறுதி. அந்தச் செய்தியைக் கேட்ட பிறகே இங்கிருந்து கிளம்புவோம் என்கின்றனர் நம்மிக்கையோடு.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz