தி.மு.க.வுக்கு எதிராக தமிழகமெங்கும் கண்டனப் பொதுகூட்டங்கள் - அ.தி.மு.க. அறிவிப்பு!

Wednesday 19, September 2018, 23:37:42

சென்னை ராயப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. அலுவலகத்தில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை நடந்தது. 

சென்னையில் வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை அடுத்ததாக, தமிழகமெங்கும்  தி.மு.க.வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்தன என இலங்கை முன்னாள்  அதிபர் ராஜபக்சே வாக்குமூலமாகத் தந்துள்ளார். இதன் அடிப்படையில், இலங்கைத் தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசைத் தண்டிக்க வேண்டும். 

இனப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களைப் போர்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தி.மு.க.வுக்கு எதிராக வருகிற 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டனப் பொதுகூட்டங்கள் நடத்தப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு எதிர்க்கட்சியைக் கண்டித்து ஆளும் கட்சி மாநிலம் முழுவதிலும் கண்டனக் கூட்டம் நடத்துவது வியப்பான ஒன்றாக அரசியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகிறது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz