வாஜ்பாய் ஒரு சரித்திரம்....

Friday 17, August 2018, 12:39:57

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரான வாஜ்பாய் உடல்நலக் குறைவாலும் முதுமையின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே அவதியுற்று வந்தார்.

பாரத ரத்னா உள்ளிட்ட இந்தியாவின் மிக உயரிய விருதுகளைப் பெற்றவரான வாஜ்பாய், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியவர்; 10 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டவர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் 1998-ல் 13 நாட்கள் ஒருமுறை, 13 மாதங்கள் மற்றொரு முறை என ஒரே ஆண்டில் இரு முறையும், 1999 - 2004 வரை 5 ஆண்டுகள் என இன்னொரு முறையும் என மொத்தம் 3 முறை இந்திய நாட்டின் பிரதமர் பதவியை வகித்த பெருமைக்குரியவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில்தான் மே 11,13 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரான் பாலைவனப்பகுதியில் 5 அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இதே இடத்தில்தான் இந்தியா ‘சிரிக்கும் புத்தர்’ என்ற பெயரில் தனது முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனையை 24 ஆண்டுகளுக்கு முன் 1974ல் நடத்தியிருந்தது. 

1999ஆம் ஆண்டில்தான் தமிழகத்தின் அதிமுக கட்சி வாஜ்பாய் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை விலகிக்கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.

1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தல் சமயத்தில் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை வாஜ்பாய் கட்டமைத்தார். அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற, மூன்றாவது முறையாக வாஜ்பாய் பிரதமர் பொறுப்பில் அமர்ந்தார்.

மூன்றாவது முறை வாஜ்பாய் பிரதமர் பதவி ஏற்றபின், 1999 டிசம்பரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல், 2001 டிசம்பரில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூடு, 2002 குஜராத் கலவரத்தின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து – முஸ்லிம் பொதுமக்கள் கொலை போன்ற சம்பவங்கள் வாஜ்பாய் அரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தின. 

தங்க நாற்கரச்சாலைத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய போற்றத்தக்கத் திட்டங்கள் வாஜ்பாய்க்கு நற்பெயரினைச் சேர்த்தன. செயல்படுத்தப்பட்டன. இது தவிர, சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய மூதலீடு ஊக்குவிப்பு போன்றவற்றில் தனது ஆட்சிக் காலத்தில் வாஜ்பாய் அதிக கவனம் செலுத்தினார். 

இந்த முறை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த வாஜ்பாய் தன்னுடைய முழு பதவிக்காலத்தை நிறைவு செய்த, காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்கு உரியாவரானார். 

வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நமிதா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். இசையிலும் நடனத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவர். நல்ல கவிஞராகப் பல கவிதைகளை எழுதியவர். வாஜ்பாய் கவிதைகள் என்ற தலைப்பில் தமிழிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. 

2001ஆம் ஆண்டு முதல் வாஜ்பாய்க்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளின் காரணமாக பல்வேறு சமயங்களில் அவருக்கு 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. பாதிப்படைந்ததன் காரணமாக ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டது.

2005ஆம் ஆண்டுக்குப் பின் பொது வாழ்க்கையிலிருந்து விலகினாலும், நோயுற்ற தன் உடலுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்.  கடந்த  ஜூன் 11-ம் தேதி சிறுநீரகப் பாதை நோய் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாய், கடந்த 15ந்தேதி ஆபத்தான கட்டத்திற்கு சென்றார். அவரை மீட்க மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 5:05 மணிக்கு வாஜ்பாய் மரணம் அடைந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவரான வாஜ்பாய் தூய்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அனைவரையும் மரியாதையாக நடத்தியவர். பிற மதத்தினராலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். அரசியல் விமர்சகர்களால் RIGHT MAN IN THE WRONG PARTY என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz