கேரளாவில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். எண்ணற்றோர் இறந்துள்ளனர். வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வந்து பணம் மற்றும் பொருட்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் சேகரிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை காவேரிப்பட்டணத்தில் இருந்து அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கடந்த செவ்வாய்க்கிழமையன்று நான்கு லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பி வைத்தார்.
அரிசி, கோதுமை, ரவை, பேரிட்சை, சமையல் எண்ணைய், டீ தூள், சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள், துவரம் பருப்பு, பச்சை பயறு, கொண்டைக் கடலை. புளி இவற்றுடன் சானிட்டரி நாப்கின்ஸ், புளோர் கிளினர், டாய்லெட் கிளினர், கிளினிங் பிரஷ், கையுறை, பக்கெட், மக், துடைப்பம், போர்வை, டூத் பிரஷ், டூத் பேஸ்ட், குளியல் சோப், வாஷிங் பவுடர், ஸ்டீல் தட்டு, ஸ்டீல் டம்ளர், பிஸ்கட் 10 அடங்கிய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போன்ற பொருட்கள் லாரிகளின் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பொருட்களுடன் உடன் சென்ற கிருஷ்ணகிரி எம்.பி.அசோக்குமார் அவற்றைப் கேரள மாநிலம் பால காடு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்தார்.