
அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மறு மதிப்பீட்டில் மாணவர்கலைத் தேர்ச்சியடைய வைக்க சுமார் 400 கோடி ரூபாய் வரையில் லஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் புகார் கிளம்பியது.
இந்த மெகா ஊழலில் பல்கலைக் கழகத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. பலகலைக் கழக வட்டாரங்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தப் புகார் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இது குறித்து நடந்த விசாரணையில் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவராகக் கண்டறியப்பட்டார். அவரது வீட்டில் இருந்து சுமார் 60 மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
கடந்த இரு ஆண்டுகளில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் கைமாற்றப்பட்ட 400 கோடி ரூபாய் லஞ்ச விவகாரத்தில் இவருக்கு மிக முக்கிய பங்குள்ளது என்பதும் நிரூபணம் ஆனது.
இதையடுத்து அண்ணா பல்கலைக் கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.