சேலத்தில் இருந்து தற்போது சென்னைக்கு இயக்கப்பட்டுக் கொண்டுள்ள சேலம் – சென்னை எழும்பூர் ரெயிலை கரூர் வரையில் நீட்டிக்க சேலம் ரெயில்வே கோட்டம் எடுத்துள்ள முடிவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
சென்னை- சேலம் ரெயிலை கரூர் வரையில் நீட்டிக்கும் இந்த முடிவினை சேலம் ரெயில்வே கோட்டம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் கரூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வேறு புதிய ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையினை பா.ம.க. சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
“சேலம் எழும்பூர் ரெயிலை சேலம் மாவட்ட மக்களின் எண்ணங்களுக்கு மாறாக கரூருக்கு நீட்டித்தால் சேலம் மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு அந்த ரெயிலை மறித்து சேலம் ரெயில் நிலையத்தில் தடுத்து நிறுத்துவோம்” என்று அக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள் தெரிவித்துள்ளார்.
தங்களின் இந்தக் கோரிக்கை அடங்கிய மனுவினை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளரிடம் பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள், சேலம் மாவட்டச் செயலாளர் சாம்ராஜ், மாநகர மாவட்டச் செயலாளர் கதிர்.இராசரத்தினம், பசுமைத் தாயகம் சத்திரிய சேகர் உள்ளிட்ட பா.ம.க.வினர் இன்று நேரில் அளித்தனர்.