மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்காக நிலத்தினைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது. எட்டுவழிச் சாலை அமைய உள்ள பகுதி பெரும்பாலும் விவசாய நிலமாக உள்ளது என்பதால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழக அரசு, காவல்துறையினரைக் கொண்டு, கிராம பகுதிகளுள் சென்று, விவசாய நிலங்களில் எட்டுவழிச் சாலைக்கான நிலத்தை அளந்து எல்லைக் கற்களை நட்டனர். மேலும், எட்டுவழிச் சாலைக்கான அனைத்து முதற்கட்ட பணிகளிலும் தமிழக அரசின் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதை அத்துமீறலை எதிர்த்து, விவசாயிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதற்கும், வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கும் தடை விதித்தது.
இதே போன்று நடந்த மற்றொரு வழக்கில் எட்டுவழிச் சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற உள்ளதாகவும், ஆறுவழிச் சாலை மட்டுமே அமைக்கபட உள்ளதாகவும், இதற்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திட்டம் திட்டப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் எட்டுவழிச் சாலைக்கான பணிகளை மேற்கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று இடைக்கால உத்தரவை நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்தது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி, சேலம் அருகே வனத்துறைக்கு சொந்தமான மலைப் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் அருகே சன்னியாசிகுண்டு அடுத்துள்ள ஜருகுமலைப் பகுதியில், ஏற்கனவே எல்லை கற்கள் நடப்பட்ட பகுதியான தேன்மலை என்ற மலை பகுதியில் முகாமிட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மலையில் ஆங்காங்கே இயந்திரங்களைக் கொண்டுத் துளையிட்டு சாலை அமைப்பதற்கான மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழே தெரியாத அந்த வட மாநிலத் தொழிலாளர்களிடம் இது குறித்து கேட்டபோது, இந்த மலையில் சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும், எனவே சுமார் 75 அடி வரை துளையிட்டு மண் பரிசோதனை நடத்திட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இவர்கள், இதே போன்று இந்த மலையில் மேலும் மூன்று இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக ரகசியமாக இயந்திரங்களை கொண்டு மலையில் சுமார் 200 அடியில் மண் பரிசோதனை செய்ததன் விளைவாக, தேன்மலை அருகே உள்ள ஜருகு மலையின் உச்சியில் இருந்த பாறைகள் சில நேற்று திடீர் என்று உருண்டு சிதறி கீழே உருண்டு விழுந்தன. இதைக் கண்டு பயந்து ஓடிய மலைவாழ் மக்களில் சிலர் மலைப் பாதையில் இடறி விழுந்ததால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த சில நாட்களாக இந்த மலைப் பகுதியில் மலையின் நடுவே இயந்திரங்களைக் கொண்டு துளையிட்டு, சாலை அமைப்பதற்கான மண் தரப் பரிசோதனை செய்து வருகிறார்கள். இப்படி மலையினைத் துளையிட்டதன் காரணமாக அந்த அதிர்வால் பிடிப்பினை இழந்த பாறைகளில் சில மலை உச்சியில் இருந்து உருண்டன. நீதிமன்ற உத்தரவையும் மீறி அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இரவு நேரங்களிலும் ரகசியமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தேன்மலைப் பகுதி வாழ் மக்கள் அச்சத்துடன் தெரிவிகின்றனர்.
இது குறித்தத் தெளிவான பதிலையோ விளக்கத்தையோ உரிய அதிகாரிகளிடம் இருந்து இதுவரையில் பெற இயலவில்லை. இந்த நிலைமையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் உரிய அனுமதி கிடைக்காவிட்டால் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை தொடர மாட்டோம் என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.