எட்டு வழிச்சாலைத் திட்டத்தினைக் கண்டிக்கும் விதத்தில் பேசி அந்த காணொளிகளை சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சமூக வலைதளங்களில் லைவ்வாகப் பரப்பி வந்தார். இந்தக் காணொளிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. இது மக்கள் மத்தியில் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு மேலும் எதிர்ப்பினைத் தூண்டும் வகையில் இருந்ததாகக் கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் அளித்த புகாரின் பேரில் பியூஸ் மானுஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டைக் காவல்நிலையத்தில் வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே காவல் நிலையத்தில்தான் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அதே காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.