படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பை தடுக்கும் அரசானை 56 ஐ ரத்து செய்திட வேண்டும் என்றும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், புதிய தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என்றும் இந்தப் போடத்தில் வலியுறுத்தப்பட்டது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் அந்த அமைப்பினைச் சேர்ந்த இளைஞர்கள் அரைநிர்வாணப் போராட்டத்தினை நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால், சிரமத்திற்கு உள்ளாகி வருவதை எடுத்துரைக்கும் வகையில், அரை நிர்வாணத்துடன் இளைஞர்கள் கலந்து கொண்டு, தேர்தல் வாக்குறுதிபடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடாத மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
√அரசு காலிப்பணியிடங்களை நிரப்பு,
√முறைகேடுகள் இல்லாமல் நியமனம் செய்,
√அரசாணை 56ஐ வாபஸ் பெறு,
√புதிய தொழிற்சாலை உருவாக்கு,
√சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்று,
√சேலம் இரும்பாலையை விரிவாக்கு
போன்ற தொடர்முழக்கங்களுடன் பட்டதாரி இளைஞர்களின் அவல நிலையை வெளிபடுத்தும் விதமாக பட்டாபட்டி டிராயர், டை அணிந்து ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும் அரசு துறையில் நிரப்பப்படும் ஒரு சில பணியிடத்திற்கும் லஞ்சம் பெறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் பேசிய DYFIன் சேலம் மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார், பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து 2 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு உருவாக்கி தரவில்லை என்றும், தமிழகத்தை பொறுத்தவரை 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்று கூறி, 5000 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், எனவே மத்திய மாநில அரசுகளை, அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்றார். மேலும் சேலம் இரும்பாலையை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போராட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.