திருச்சி மாவட்டத்து அணைகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்....

Saturday 18, August 2018, 15:12:09

கர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு வந்தடைந்த தண்ணீரால் அடுத்தடுத்து அணை இரண்டு முறை நிரம்பியது.

அணை நிரம்பியதையடுத்து மேட்டூர்அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 1 லட்சத்து 56 ஆயிரம் கன அடி தண்ணீருடன், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் 50 ஆயிரம் கனஅடி நீர் ஈரோடு அருகே காவிரியில் கலக்கிறது. அதேபோல் திருப்பூரில் உள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒன்று சேர்ந்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் கலக்கிறது.

இதன்மூலம் மாயனூர் கதவணைக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரத்து உள்ளது. அங்கிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களிலும் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வரத்து ஒரு லட்சத்து 97 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 50 ஆயிரத்து 146 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் 2 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கொள்ளிடத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னர் கரையோர பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை தங்க வைக்கப்படுள்ளனர், அவர்களுக்குத் தேவையான உணவுகள் மற்றும் அனைத்து உதவிகளையும் திருச்சி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணை, முக்கொம்பு, கரூர் மாயனூர் அணைகளை  இன்று காலை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

 

 

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz