
சென்னை புழல் மத்திய சிறைக்குள்ளாகக் கைதிகள் கலர் டி.வி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த தகவல் அண்மையில் புகைப்படங்களுடன் வெளியாகி காவல்துறை மற்றும் சிறைத்துறை வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் சிறைக்குள்ளாக சோதனை மேற்கொண்டு தணிக்கை செய்தனர். அப்போது 15க்கும் அதிகமான கலர் டி.வி.க்கள் சிறைக்குள்ளாகக் கைதிகள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வசதிகள் கைதிகளுக்குக் கிடைக்க, புழல் சிறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடந்தை என்பது தெரியவந்தது.

புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை காவலர்கள் விஜயராஜ், கணேசன்; சிறை வார்டன்கள் - பாவாடை ராயர், ஜபஸ்டின் செல்வகுமார், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வகுமார், பிரதாப் சிங் உள்ளிட்ட எட்டு பேர் இந்த விவகாரம் குறித்து அதிரடியாக வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை முதல் கட்டமே என்றும் மேலும் களையெடுப்பு விரைவில் நடக்கும் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.