ராஜீவ் கொலை வழக்குச் சதியில் தொடர்புடையவர்களாக தமிழகச் சிறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென பலராலும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மிகவும் எதிர்பார்த்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசும் கைவிட்ட நிலையில், குடியரசுத் தலைவரும் இவர்களது கருணை மனுவை நிராகரித்தார்.
இந்த நிலையில் ஆட்சியில் அமர்ந்த தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறையில் வாடும் எழுவரையும் விடுவிக்க 2016ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனாலும், அப்போது எழுந்த சட்ட சிக்கல் காரணமாக விடுதலைக்கு முட்டுக்கட்டை விழுந்தது.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் தீர்ப்பரித்த உச்சநீதி மன்றம் .எழுவர் விடுதலை குறித்துத் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என அறிவித்தது.
பரபரப்பான சூழலில் இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் இந்த நிலைப்பாடு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்துத் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
தமிழக அமைச்சரவை 7 பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருப்பதை மனமாற வரவேற்று நன்றி செலுத்துகிறேன். அமைச்சரவையின் பரிந்துரையை கால தாமதம் செய்யாமல் உடனடியாக ஏற்று அவர்களை விடுதலை செய்ய முன் வருமாறு ஆளுநரை வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்வின் வசந்த காலமான இளமைப் பருவத்தை 27 ஆண்டுகாலமாக சிறையில் தொலைத்துவிட்ட 7 பேர்களின் மறு வாழ்வுக்கு உதவ முன் வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்.
26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவில் அங்கம் வகித்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி 19 பேரை விடுதலை செய்வதற்கும் அதற்கு பிறகும் 7 பேர் விடுதலை வரை தொடர்ந்து ஒத்துழைத்த அமைப்புகள், மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.