வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. பழமை வாய்ந்த இந்தப் பெருமாள் கோவிலைப் புதுப்பிக்கும் முடிவினை எடுத்த பக்தர்கள் ஒன்று கூடி அந்தப் பணியினைத் தற்போது தொடங்கி நடத்தி வருகின்றனர்.
பெருமாள் கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் புதியதாக சில சுவர்களை அமைப்பதற்காக கோவில் வளாகத்துள் சில இடங்கள் தோண்டப்பட்டு ஆழமாக்கப்பட்டன. நேற்று கோவிலின் ஒரு பகுதியில் அப்படித் தோண்டப்பட்ட போது, ஒரு இடத்தில் நிலத்துள் உலோகம் போல எதோ ஒன்று தட்டுப்பட்டு சப்தம் எழுந்துள்ளது.
புதையலாக அது இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் சத்தம் வந்த அந்த இடத்தினை மிகக் கவனமாகத் தோண்டியுள்ளனர். நிலத்தினுள் புதைந்திருந்த சுமார் 1 1/2 அடி உயரம் 3 கிலோ ஒரு பெருமாள் சிலையும், சுமார் 1அடி உயரம் 2கிலோ எடையுள்ள ஆழ்வார் சிலை ஆகிய இரு வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
புதையலாகக் கிடைத்த இந்த இரு சிலைகளின் மதிப்பென்ன? அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது போன்ற எந்த விபரங்களும் தெரியவில்லை.