தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த ஜூலை மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகப் பாதுகாப்புக் கருதி, பொதுமக்கள் ஐந்தருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 87 நாட்களுக்குப் பிறகு நேற்று அந்தத் தடையினை நீக்கிய மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளித்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பெருமகிழ்ச்சியினை அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையாலும், கர்நாடக கிருஷ்ணராஜசாகர் அணை கபினி, ஹேமாவதி அணைகளில் இருந்து வெளியேறிய உபரிநீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 கனஅடியாக இருந்த உபரி நீரானது படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக வினாடிக்கு, 2.25 கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக் கருதிய மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், ஐந்தருவி மற்றும் ஆற்றில் குளிக்கவும் தடைவிதித்தது இதற்கான உத்தரவினை தர்மபுரிமாவட்ட ஆட்சியர் மலர்விழி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக உத்தரவிட்டார்.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி பகுதியில் உள்ள தடுப்புவேலிகள் முற்றிலுமாகச் சேதமடைந்தன. இதைதொடர்ந்து உபரிநீர் குறைந்ததை அடுத்து சின்னாற்றில் மட்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
87 நாட்களுக்கு பின்பு நேற்று காலை நிலவரப்படி ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக உபரிநீர் குறைந்ததைத் தொடர்ந்தும், ஐந்தருவியில் பாதுகாப்பு வேலிகள் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்தும் சார்ஆட்சியர் சிவனருள் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பின், ஆய்வுக்குபின் ஒகேனக்கல் காவிரியாறு மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் முன்பு போலக் குளிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.