ஈரோடு அருகே வளையல்கார வீதியைச் சேர்ந்தவர் சுகுமாா், இவர் சாஸ்திரி நகர் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகைக கடை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் தனது மளிகைக் கடையின் முன்பாக பட்டாசுக் கடையினையும் இவர் போடுவது வழக்கம்.
இதற்காக சுகுமாரின் மகன் கார்த்திக் ராஜா வெளி மாவட்டங்களில் இருந்து பட்டாசு வெடி ரகங்களை மொத்தமாக வாங்கி பட்டாசு கடை வைத்து விற்பனை செய்து வந்தார். இந்த ஆண்டு விற்பனைக்கென வாங்கி வரப்பட்ட 15 மூட்டை பட்டாசு ரகங்களை இன்று காலை 6 மணிக்கு சுகுமார் தனது மகன் உள்ளிட்ட 4 நபர்களுடன் ஆட்டோவில் இருந்து இறக்கி வைத்து கொண்டு இருந்தார்.
13 மூட்டைகளைக் கீழே இறக்கிய பின், ஆட்டோவில் இருந்த மீதமிருந்த மூட்டைகள் பலத்த சத்ததுடன் வெடித்தன. இதில் சுகுமார் மகன் கார்த்திக் ராஜா மற்றும் ஆட்டோவில் இருந்த 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 5க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் பல குடியிருப்புகள் சேதமடைந்தன.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா நேரில் விசாரணை நடத்தினார்.
இதில் சுகுமார் முறைப்படி அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்தார்; ஆனால், அதே சமயம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெடி வகைகளையும், வெடிபொருட்களையும் அவர் விற்பனை செய்து வந்தார், இந்த வெடி வகைகளே விபத்துக்குக் காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.