ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட திறனூட்டல் மாநாடு

Tuesday 11, September 2018, 16:19:13

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த அரசுபணியாளர்களுக்கான திறனூட்டல் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குதத திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி முன்னிலை வகித்தார்.

இம் மாநாட்டுக்குக் கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி சு ஜவஹர் தலைமை வகித்துப் பேசியதாவது:

"கருவூலம் மற்றும் கணக்குத்துறையானது 1962-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நிதித்துறையின் கீழ் ஒரு தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக 2017 - 2018 நிதி ஆண்டில் ரூ.1,55,824,00,00,000 (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று இருபத்து நான்கு கோடி) வரவினமாகவும் ரூ. 1,70,256,00,00,000 (ஒரு இலட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு கோடி) செலவினமாகவும் அரசின் நிதியானது கையாளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும் கருவூலப் பணிகளை மேம்படுத்தும் பொருட்டும் பிரத்யேகமான வழிமுறைகளை கையாண்டு மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அரசு ரூ. 288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதத திட்டத்தினைச் செயல்படுத்த மிகப்பெரிய மூன்று முன்னோடி நிறுவனங்களான அக்சென்சர் சர்வீசஸ் பி.லிட்., திட்டத்தின் ஆலோசனை முகமையாக விப்ரோ லிட்., திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் ஆகியவை மூன்றாம் நபர் தணிக்கை முகமையாகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் மாநிலக் கணக்காயர், இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளர் ஆகிய பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைக்கப்படுவர்.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுதில்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உட்பட சுமார் 29000 சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை நேரடி இணையம் மூலம் எவ்வித கால நிபந்தனையுமின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க இயலும். மேலும், கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமின்றி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை கருவூலங்களில் சமர்ப்பிக்க நேரில் வரவேண்டிய சூழல் முற்றிலும் தவிர்க்கப்படும்.

மேலும், சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணைய வழி மூலம் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து பயனாளியின் வங்கி கணக்கில் பணம் சேரும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எளிதாக அறிந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுகிறது.

தற்போதுள்ள நடைமுறையின்படி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலிருந்து சுமார் 6 முதல் 10 நாட்களுக்குப் பிறகே பட்டியல் தொகை பயனாளர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்படும் இத் திட்டத்தினால் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளில் வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ-குபேர்(e-kuber)வசதியின் மூலம் தீர்வு செய்ய இயலும்.

ஒருவேளை பட்டியல் தொகை அந்தப் பயனாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாத நிலை ஏற்பட்டால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் கவனிக்கப்பட்டு உடனடியாக குறைகள் (பயனாளியின் பெயர், வங்கிக் கணக்கு எண், IFSC  கோடு) சரிசெய்து காலதாமதத்தைத் தவிர்க்க முடியும். இத் திட்டத்தினால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூலத்திற்கும் மாதாந்திரக் கணக்கின் போது நடைபெறும் ஒத்திசைவுப் பணி இனி வருங்காலங்களில் தவிர்க்கப்படும்" என பேசினார்.

இக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், காவல் துணை ஆணையர் நிஷா, வருமானவரித்துறை துணை ஆணையர் சுரேந்திரநாத், யோகேஷ் சிங், முதன்மை வன பாதுகாவலர் வித்யா உள்பட அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz