கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகிக்க, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவின் தன்னுடைய பேச்சின்போது மெரினாவில் கருணாநிதி சமாதி அமைந்ததும் அதிமுக அரசு போட்ட பிச்சை என்று பேசியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் பேசியதின் முக்கிய பகுதிகள்: "தமிழகத்தில் முதல்வர்களாக இருந்து இறந்து பெருமை சேர்த்தவர்கள் அண்ணா, எம்.ஜீ.ஆர். ஜெயலலிதா. ஆனால், முதல்வராக இல்லாமல் இறந்து போன கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என்று முதல்வர் தைரியமாகச் சொன்னார். ஆனால், அவர்கள் நீதிமன்றம் சென்று இடம் வாங்கி விட்டனர். இதனால் அண்ணாவே நொந்து போய் இருப்பார்.
இறந்து பிறகும் இடத்திற்கு போராடி நீதிமன்றம் சென்று அலைந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது இறந்தாக கூறியதன் எதிர்வினைதான். கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது என்றால் அது அதிமுக அரசு போட்ட பிச்சை. மேல் முறையீடு என்று நாங்கள் போய் இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். மெரீனாவில் கருணாநிதி சமாதி அமைந்ததும் அதிமுக அரசு போட்ட பிச்சை தான்.
ஜெயலலிதாவின் பெயரில் கட்சி ஆரம்பிக்க டி.டிவி.தினகரனுக்கு அருகதையும், தகுதியும் இல்லை. ஆர்.நகரில் மக்களை ஏமாற்றி 20 ரூபாயினை டோக்கனாகக் கொடுத்து வெற்றி பெற்ற பிறகுதான் அதன் விளைவு தெரிகிறது. பொதுமக்கள் துடைப்பத்துடன் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் டி.டிவி.தினகரன் காபிபோசா சட்டத்தில் சிறைக்குச் சென்றவர். மொழிக்கவோ, சுதந்திரத்திற்காகவோ அவர் சிறைக்குச் செல்லவில்லை, அந்நிய செலவாணி மோசடிக் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவர்.
ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லித் திருட்டு தனம் பண்ணியது யார் என்று எல்லாருக்கும் தெரியும். டி.டிவி.தினகரன் வீட்டில் ஒவ்வொருவரும் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், முதல்வர், அமைச்சர்கள் பற்றி கிள்ளுக் கீரையாக டி.டிவி.பேசி வருவது பற்றி மக்களுக்குத் தெரியும்.
டி.டி.வி.தினரகன் கோவில்பட்டி தொகுதியில் நின்று ஜெயிக்க முடியுமா ?, நாங்கள் என்ன செய்தாலும் குறைசெல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களுடைய மக்கள் பணி என்றும் தொடரும்" என்றார் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ.