திருச்சி மாநகரில் நடைபயிற்சிக்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும் தற்போது ஸ்ரீரங்கத்தையும் நெ1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் சென்னை நேப்பியர் பாலம் அமைப்பில் கட்டப்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தப் பாலத்தின் பக்கவாட்டுப் பாதையில் காலை, மாலை என இரு வேளைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் பேருந்துகள், கனரக வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினம்தோறும் இந்தப் பாலத்தில் பயணிக்கின்றன. இந் நிலையில் இந்தப் பாலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளின் தூண்கள் மண் அரிப்பால் சேதமுற்றிருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த மாதம் 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. இதனால், உபரி நீர் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக திறந்து விடப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கினால் திருச்சி பழைய கொள்ளிடம் ஆற்றில் இருந்த 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தின் 3 தூண்கள் கடந்த மாதம் 18-ம் தேதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
ஏற்கனவே வலுவிழந்த நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இருந்ததால் இரும்பு பாலம் இடிந்தாலும் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 3 தூண்கள் இடிந்ததை தொடர்ந்து 24 தூண்களுடன் 800 மீட்டர் நீளத்திலான அந்த பாலத்தின் இரு பகுதிகளும் பொதுமக்கள் நடமாட முடியாதபடி அடைக்கப்பட்டன.
அதேநேரம் முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் மேலணையும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படவே மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆர்ப்பரித்து திருச்சியைக் கடந்து கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கின்றது. கொள்ளிடம் இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததற்கு வெள்ளப்பெருக்கு தான் காரணம் என்றாலும், ஆற்றில் அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் தான் மண் அரிப்பினால் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இடிந்து விழுந்த இரும்புப் பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற வடிவமைப்புடன் 2016-ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடியில் கட்டப்பட்டு முன்னள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காவிரி ஆற்றில் மட்டும் தான் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக மட்டுமே சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆறு தற்போது மணற்பாங்காக காட்சி அளிக்கிறது.
ஆற்றின் கரையோர பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஓடை போல் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் புதிய பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் நன்றாக வெளியே தெரிகிறது. கொள்ளிடம் புதிய பாலத்தையும் 24 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதில் 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் ஏற்பட்ட மணல் அரிப்பினால் பிடிமானம் இன்றி காட்சி அளிக்கின்றன.

ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு ஏற்கனவே இருந்த மணல் எல்லாம் அடித்து செல்லப்பட்டு விட்டதால் அஸ்திவாரத் தூண்களின் கீழ்ப் பகுதி வரை வெளியே தெரிகிறது. இதனால் புதிய பாலமும் வலுவிழந்து அதன் தூண்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கர்நாடகத்தில் பெய்த தென் கிழக்கு பருவ மழையினால் தான் மேட்டூர் அணை நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டு கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்படலாம்.

அதேபோல் கொள்ளிடம் ஆற்றில் பதிக்கப்பட்டிருக்கும் உயரழுத்த மின்கோபுரங்களின் பிள்ளர்களும், அதிநவீன ஆழ்குழாய் குடிநீர் பைப்புகளை தாங்கி நிற்கும் பிள்ளர்களும் பேராபத்தை உணர்த்திடும் அளவிற்கு மண் அரிப்பால் காட்சி தருகின்றது. மண்ணில் புதைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெளியே தெரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்தப் பாலத்தை தாங்கி நிற்கும் அஸ்திவார தூண்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அவற்றை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆட்சியருக்கு மனுக்கள் பறந்துக்கொண்டிருக்கின்றன.
ஆட்சியர் இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பது தெரியாமல் பரிதவிப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.