திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை கடைத்தெருவில் உள்ள பெரியார் சமூக விரோதிகளால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டு அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர். பெரியார் சிலையின் கைத்தடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை கடைத்தெரு பகுதியில் உள்ள பெரியார் சிலை 1991ம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்தச் சிலை அருகில் உள்ள கரும்பலகையில் அப்பகுதி திராவிடர் கழகத்தினர் தினமும் பெரியாரின் வாசகங்களை எழுதி வைப்பது வழக்கம்.
இன்று அதிகாலை 4.45 மணிக்கு வழக்கம் போல பெரியாரின் வாசகங்களை எழுத, தி.க. செயலாளர் செபஸ்தியான் சென்றுள்ளார். அப்போது பெரியார் சிலையின் 5 அடி உயரக் கைத்தடி சிலையில் இருந்து உடைந்த நிலையில் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துஉடனடியாக மாவட்ட மண்டலத் தலைவர் மு.நற்குணம், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ், மண்டலச் செயலாளர் ப.ஆல்பர்ட் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மணிகண்டம் ஒன்றிய தி.க செயலாளர் செபஸ்தியான் சோமரசம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து சிலையைச சேதப்படுத்தி, உடைத்தவர்களைத் தேடி வருகின்றனர். சேதமடைந்த சிலையினைச் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
பெரியார் சிலை அடையாளம் தெரியாத சில விஷமிகளால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப் பகுதியில் பததடம் நிலவி வருவதால் பாதுகாப்புக் கருதிப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்டித்துக் கோஷமிட்ட திராவிடர் கழகத்தினர், பெரியார் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி.யையும் சந்தித்துக் கோரிக்கையும் விடுத்தனர்.
இதேபோல், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவரப்பட்டு கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இன்று செருப்பு மாலை அணிவித்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.