108 திவ்ய தேசங்களில் முதலான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இக்கோயிலில் வரும் மாதம் நவராத்திரி விழாக்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அக்டோபர் 19-ல் விஜயதசமி திருநாள் புறப்பாடு நடக்கிறது. நவராத்திரி 9 நாட்கள் முடிந்து மறுநாள் விஜயதசமி திருநாளில் நம்பெருமாள் காலை 6.30 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் வந்த பின் காட்டழகிய சிங்கர் கோயில் வளாகத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு எழுந்தருள்கிறார்.
திருவாராதனம், தளிகை கண்டபின் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.மாலை 6.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மண்டபம் எதிரே உள்ள வன்னி மரத்தில் அம்பு எய்திய பின்னர் கீழ அடையவளஞ்சான் வீதி மற்றும் சாத்தார வீதி வழியாக வலம் வந்து மூலஸ்தானம் அடைகிறார்.
ஸ்ரீரங்க நாச்சியார் நவராத்திரி உற்சவம் வரும் அக்டோபர் 10 முதல் 18ம் தேதி வரை தாயார் சன்னதியில் நடைபெற உள்ளது. புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை தினத்தை துவக்கமாக கொண்டு 9 நாட்கள் நவராத்திரி திருநாள் நடக்கிறது. தாயார் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி, திருவாராதனம், தளிகை வகை கண்ட பின்னர் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். நவராத்திரியின்போது நாதஸ்வர மங்கள இசை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
நவராத்திரி 7ம் திருநாளன்று(14ம் தேதி) தாயார் திருவடி சேவை நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த உற்சவம் நடைபெறும். ஒன்பதாம் திருநாள் சரஸ்வதி பூஜையன்று தாயார் திருமஞ்சனம் நடைபெறும். இதேபோல் ரங்கநாதர் கோயிலின் உப கோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் நவராத்திர உற்சவம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.