வாடகை குடியிருப்புகளுக்கான சொத்துவரி உயர்வு 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Thursday 26, July 2018, 18:40:20
சென்னை
 
குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி  வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
அதே சமயம் சொத்து வரி உயர்வு மூலம் சுமார் ஆயிரத்து 160 கோடி ரூபாய் கிடைக்கும் என தமிழக அரசு எதிர்ப்பார்த்துள்ளது.
 
இந்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz