திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் போலீஸாரைக் காய்ச்சியெடுத்த கே.என்.நேரு

Tuesday 18, September 2018, 16:19:00

தமிழ்நாடு அரசுக்கு எதிராக திமுக இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸை கலகலக்க வைத்த கே.என்.நேரு., இங்குள்ள ஏ.சி.க்கும் பி.சி.க்கும் கலைஞர் அவார்ட் கொடுக்கப்போறோம் என கலாய்ச்சி காய்ச்சியெடுத்தார்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஊழல் நிறைந்த தமிழ்நாடு அரசை கண்டித்து திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் திரளாக கலந்துக்கொண்டதால் சிந்தாமணி பகுதி ஸ்தம்பித்தது.

ஆளும் அதிமுக அரசின் அலட்சியங்களையும், அமைச்சர் பெருமக்கள் அடித்துக்கொண்டிருக்கும் ஊழல்களையும் கண்டித்து திருச்சி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு,

"தமிழ்நாடு அரசு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்தவித புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கமிஷனுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். நேற்று அண்ணா சிலைக்கு நாங்கள் மாலையணிவித்தபோது சொன்ன நேரத்துக்கு நாங்கள் 8.30 மணிக்கு மாலை அணிவித்தோம். போலீஸாரும் ரொம்ப நல்லா பேசி எங்களை வழியனுப்பினர்.

பின்னர்தான் தெரிஞ்சுச்சு போலீஸார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ரொம்ப நேரமா ரோட்டுல காத்திருந்தாங்கன்னு. ஏன்னா அடுத்து மாலை போட வந்தவர்கள் அதிமுகவினர். அதாவது 2 அணியும் வருவதால் ஏதும் அசம்பாவிதம் நடந்துடக்கூடாதுன்னு வெயிலில் 12 மணி வர காத்திருந்தாங்க ரொம்பவும் பந்தோபஸ்தோட. அதனாலயே இங்க உள்ள ஏ.சி.க்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கலைஞர் அவார்ட் நாங்க கொடுக்கப் போறோம்" என சூடாகத் தன் பேச்சைத் தொடங்கினார் கே.என்.நேரு. 

தொடர்ந்து அவர் பேசும்போது, "ஊர்வலம் நடத்தக் கூடாதுன்னு சட்டம் இருக்குல்ல, ஏன் கமிஷனரே அதிமுகவினர் 2 அணிகள் ஊர்வலம் நடத்தி மாலை அணிவித்ததற்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க? மாலை போடுவதற்கே இப்படி பேனர்களை வைத்து பல இடங்களை மறைச்சவங்களுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது? திருச்சி காவல்துறை இப்ப ஏவல்துறையாத்தான் இருக்கு. 

k.n.hehru protest
அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனம் இல்ல வழியில் பயம் இல்லன்னு சொல்றார். கொண்டுபோய் கொடுத்து பாதுகாப்பா வைக்க வேண்டிய இடத்துல வைச்சுட்டு மடியில கனம் இல்லன்னு சொன்னா எப்படிப்பா? 

"இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்களெல்லாம் என்னமோ அப்படியே தொடரப் போறோம்ன்னு நினைச்சுட்டிருக்காங்க, ஆனா, அவங்க சீக்கிரமே ஜெயில்ல இருக்கப் போறாங்க என்பதுதான் உண்மை. ஐ.ஏ.எஸ். ஆபிஸரும், ஐ.பி.எஸ். ஆபிஸரும் ஆளும் கட்சிக்கு சலாம் போட்டுட்டு இருக்கீங்களே நீங்கள் எல்லாம் என்ன நிலைக்கு ஆளாகப் போறீங்கன்னு தெரியல. நாங்க அரசியல்வாதிங்க இப்ப எப்படி கோர்ட் படியேறிகிட்டிருப்பதுபோல நீங்களும் ஒருநாள் கோர்ட் படியேறப் போவதுதான் உண்மை.

எம்.பி. தம்பிதுரை தம்பிதுரைன்னு ஒரு துணை சபாநாயகர் கரூர்ல இருக்கார். அவர் மாமனாரு வீட்டுக்கு மட்டும்தான் போவாரே தவிர வேடசந்தூருக்கோ, குஞ்சிலியம்பாறைக்கோ, மணப்பாறைக்கோ போய் மக்கள இதுவரை பார்த்ததுண்டா? இப்ப வந்து போலீஸ் ஆபிஸருங்கள அழைச்சுகிட்டு மக்கள பார்க்கற நீங்க வந்து தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கு ரகசியக் கூட்டுன்னு சொல்றது எந்த.விதத்தில் நியாயம்?

இப்படிச் சொன்னா மட்டும் சிறுபான்மையினத்தவர் ஓட்ட நீங்க வாங்கிட முடியுமா? மவனே நீ வா.. எலக்சென்ல பார்த்துக்கலாம்! நீங்க ஒருபடி ஏறினா தினகரன் 2 அடி கீழே இழுப்பார் என்றதுடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரையும் ஒரு கை பார்த்த நேரு, மாவட்ட ஆட்சித் தலைவரையும் விட்டு வைக்கவில்லை.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என் சேகரன், பரணிகுமார், மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz